இந்தியா

ஆந்திராவிலும் அரசு மதுக்கடை: இன்று முதல் விற்பனை

1st Oct 2019 10:21 AM | C.P.சரவணன்

ADVERTISEMENT

 

தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி (இன்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாக கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை (பெல்ட் ஷாப்கள்) மூடுவதற்கு உத்தரவிட்டார்.

மேலும் மது விற்பனையில் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு என்னென்ன விதி முறைகளை கடைபிடிக்கிறது என அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். இந்தநிலையில், ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான உரிமத்தை தனியாருக்கு அரசு வழங்கியிருந்தது. இந்த உரிமம் வழங்கப்பட்ட கடைகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கலால் துறை முதன்மைச் செயலாளர் சாம்பசிவராவ் உத்தரவிட்டார்.

ஆந்திர மாநில மதுபானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (Andhra Pradesh State Beverages Corporation Limited (APSBCL) என்ற அமைப்பின் கீழ் மாநிலம் முழுவதும் அரசே மதுபானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள மதுக்கடைகளில் 20 சதவீதம் குறைத்து, மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 4,377 மதுக்கடைகளில், 876 கடைகள் குறைக்கப்பட்டு, 3504 கடைகள் அக்டோபர் 1ம் தேதி இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும், ரூ.10 முதல் ரூ.250 வரை மது பாட்டில்கள் மீது கூடுதல் வரி ஆந்திர அரசு விதித்துள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசே மதுபானங்களை விற்பனை செய்தாலும் கலால் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று இங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக நகரப்பகுதிகளில் ஒரு கடைக்கு நான்கு ஊழியர்களும், கிராமப்பகுதிகளில் ஒரு கடைக்கு 3 ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT