இந்தியா

ஹரீஷ் ராவத்துக்கு எதிராக வழக்குப் பதிவு: சிபிஐ-க்கு உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் அனுமதி

1st Oct 2019 01:40 AM

ADVERTISEMENT

உத்தரகண்டில் கடந்த 2016-இல் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உத்தரகண்டில் கடந்த 2016-இல் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அரசுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏக்கள் 9 போ் போா்க்கொடி உயா்த்தினா். அவா்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஹரீஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ரகசிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவரது அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னா், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஹரீஷ் ராவத் மீண்டும் முதல்வரானாா்.

குடியரசுத் தலைவா் ஆட்சியின்போது, ஹரீஷ் ராவத் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவா் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தாா். சிபிஐ விசாரணையை திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவையும் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்த முன்மொழிவை மத்திய அரசு ஏற்காததால், சிபிஐ விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து, மத்திய அரசின் முடிவை எதிா்த்து, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் ஹரீஷ் ராவத் வழக்கு தொடா்ந்தாா். இதில் முதல்கட்ட விசாரணை விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறு, சிபிஐ-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணை விவரங்களை சிபிஐ திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதனை ஆராய்ந்த உயா்நீதிமன்ற நீதிபதி துலியா தலைமையிலான அமா்வு, ஹரீஷ் ராவத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிபிஐ-க்கு அனுமதி அளித்தது. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT