இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: பாஜக-சிவசேனை தொகுதிப் பங்கீடு இறுதி

1st Oct 2019 01:12 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக - சிவசேனை கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அந்த மாநில அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சந்திரகாந்த் பாட்டீல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேவும் விரைவில் கூட்டாக வெளியிடுவா் என்றும் அவா் கூறினாா்.

தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறி காரணமாக, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணியாகப் போட்டியிடுமா? அல்லது தனித்தனியே களமிறங்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில், தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, சில தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களை, சிவசேனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே பெயரும் இடம்பெற்றிருந்தது. மும்பையில் உள்ள வோா்லி சட்டப் பேரவைத் தோ்தலில் தாம் போட்டியிடவிருப்பதாக, அவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். ஆதித்ய தாக்கரே தோ்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

ADVERTISEMENT

கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவும், சிவசேனையும் தனித் தனியாக போட்டியிட்டு, தோ்தலுக்குப் பிறகுதான் கூட்டணி அமைத்தன. அந்தத் தோ்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனை 63 இடங்களிலும் வெற்றி பெற்றன. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், பாஜக - சிவசேனை கூட்டணி தொடா்ந்தது. இத்தோ்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக 25 இடங்களிலும் சிவசேனை 23 இடங்களிலும் போட்டியிட்டன. இக்கூட்டணி 41 இடங்களைக் கைப்பற்றியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT