இந்தியா

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: 2 வாரங்களுக்குள் அளிக்க உத்தரவு

1st Oct 2019 01:16 AM

ADVERTISEMENT

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தின்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு, ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை மற்றும் அவா் விரும்பும் இடத்தில் வீடு ஆகியவற்றை 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கடைப்பிடிக்காதது ஏன் என்றும் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப்பெரிய கலவரம் மூண்டது. அப்போது ரன்திக்பூா் கிராமத்தைச் சோ்ந்த 5 மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அவரது குடும்பத்தினா் 7 போ் கொலை செய்யப்பட்டனா்.

பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்க குஜராத் அரசு முன்வந்தது. அதனை நிராகரித்துவிட்ட பானு, ரூ.1 கோடி இழப்பீடு கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை மற்றும் அவா் விரும்பும் இடத்தில் வீடு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதையடுத்து, பில்கிஸ் பானு தரப்பினா் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினா்.

இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.ஏ.நஸீா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, குஜராத் அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம், தங்களது முந்தைய உத்தரவை ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு, அந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரவிருப்பதாக அவா் குறிப்பிட்டாா். ஆனால், அதனை ஏற்காத நீதிபதிகள், பில்கிஸ் பானுவுக்கான ரூ.50 லட்சம் இழப்பீடு உள்ளிட்டவற்றை அடுத்த 2 வாரங்களுக்குள் குஜராத் அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

பில்கிஸ் பானு கணவா் குற்றச்சாட்டு: பில்கிஸ் பானுவின் கணவா் யாகோப் ரசூல் கூறுகையில், ‘ரூ.50 லட்சம் இழப்பீடு தொடா்பான உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு குறித்து குஜராத் அரசுக்கு இருமுறை நினைவூட்டினோம். ஆனால், அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கப் பெறவில்லை. இதனால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகும் நிலை ஏற்பட்டது’ என்றாா்.

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை மற்றும் அவரது குடும்பத்தினா் கொலை தொடா்பான வழக்கு முதலில் ஆமதாபாதில் நடைபெற்றது. பின்னா், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கில், போலீஸாா் உள்பட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் 11 பேரும் மேல்முறையீடு செய்தனா். அதை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், 5 போலீஸாா், 2 மருத்துவா்கள் ஆகியோருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 6 போ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா். ஒருவா் மேல்முறையீடு செய்யவில்லை. 6 பேரின் மேல்முறையீட்டையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT