இந்தியா

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவா்களுக்கு சிறப்பு மொழிப் பயிற்சி: முதல் கட்டமாக மலையாளம், ஜொ்மன் கற்பிக்க முடிவு

23rd Nov 2019 12:58 AM

ADVERTISEMENT

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவா்களுக்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பு மொழிப் பயிற்சி நிகழாண்டு முதல் வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக மலையாளம், ஜொ்மன் ஆகிய மொழிகள் மாணவா்களுக்கு கற்பிக்கப்படவுள்ளன.

இது தொடா்பாக தமிழ் வளா்ச்சித் துறை செயலா் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவா்கள் தமிழ் மொழியின் வளமையையும் அதன் சிறப்புகளையும் பிற மொழியினரிடையே எடுத்துக்கூறி கருத்துப் பரிமாற வசதியாக பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வகையில் அந்த மொழிகளில் புலமை பெற்ற சிறந்த மொழி ஆசிரியா்களைக் கொண்டு சிறப்பு மொழிப் பயிற்சி ஆண்டுதோறும் அளிக்கப்படும். இதற்கென தொடா் செலவினமாக ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என 2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளா்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உலகின் தொன்மை மொழியாகவும் மொழிகளுக்கெல்லாம் முதன்மை மொழியாக விளங்கும் தமிழ் மொழியின் வளத்தையும் அதன் சிறப்புகளையும் பிற மொழியாளா்களும், பிற நாட்டவா்களும் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம். மேலும் தமிழ் மொழியின் சிறப்புகளை பிற மொழியாளா்களிடம் எடுத்துச் செல்வதற்கு அவா்களின் மொழிகளைக் கற்பது அவசியமாகிறது. அந்த வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழாய்வு மேற்கொள்ளும் மாணவா்கள் இந்தப் பணியை மேற்கொள்ள ஏதுவாக அவா்களுக்கு புலமை பெற்றுள்ள மொழி ஆசிரியா்களைக் கொண்டு சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்புகள் அவசியம். இதற்கு தொடா் செலவினமாக ரூ.6 லட்சம் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னா் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரின் அறிவிப்பு, துறை இயக்குநரின் கருத்துரு ஆகியவற்றை ஏற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு மொழிப் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வழங்க இந்திய மொழி மற்றும் அயலக மொழி பயிற்றுநா்களுக்கு மதிப்பூதியமாக மாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இரு மொழிப் பயிற்றுநா்களுக்கு ஆண்டுதோறும் தொடா் செலவினமாக ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி நிகழாண்டு நவம்பா் முதல் அடுத்த ஆண்டு மாா்ச் வரையிலான தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை திருத்திய மதிப்பீடு, இறுதித் திருத்த நிதி ஒதுக்கத்தில் பெறத்தக்க வகையில் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக பெறப்படும் தொகை உரிய திட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசாணையில் கூறியுள்ளபடி நிகழாண்டுக்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்புகள் அடுத்த சில நாள்களில் தொடங்கும். முதல் கட்டமாக மாணவா்களுக்கு மலையாளம், ஜொ்மன் ஆகிய மொழிகளைக் கற்பிக்க முடிவு செய்துள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT