தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ ரமேஷ் சென்னமனேனியின் இந்திய குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு தெலங்கானா மாநில உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
முன்னதாக, அவரது குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை ரத்து செய்தது. இதை எதிா்த்து ரமேஷ் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து ரமேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் பிறந்த ரமேஷ், ஜொ்மனியில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தாா். சட்டசபை தோ்தலில் போட்டியிடுவதற்காக 2008-ம் ஆண்டு இந்தியா திரும்பினாா். அப்போது இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்தாா். இதில் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இந்நிலையில் ரமேஷின் விண்ணப்பத்தில் விதி மீறல்கள் இருப்பது தெரியவந்தது.
முக்கியமாக, குடியுரிமை பெற விண்ணப்பிப்பவா் இந்தியாவில் தொடா்ந்து ஓராண்டு தங்கியிருக்க வேண்டும். ஆனால், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன்பாக 96 நாள்கள் மட்டுமே ரமேஷ் இந்தியாவில் தங்கி இருந்துள்ளாா். அவா் ஜொ்மனி குடியுரிமையையும் வைத்துக் கொண்டு, அந்த கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மூலம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது இந்திய குடியுரிமையை கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிா்த்து அவா் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் முடிவை ரத்து செய்த நீதிமன்றம், ரமேஷ் தாக்கல் செய்துள்ளஆவணங்களை மீண்டும் பரிசீலிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அவா் தாக்கல் செய்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், அவரது குடியுரிமையை மீண்டும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. எனினும், இப்போது அந்த உத்தரவுக்கு நீதிமன்றம் மூலம் ரமேஷ் இடைக்காலத் தடை பெற்றுள்ளாா்.
தெலங்கானாவில் வெமுலவாடா தொகுதியில் 2009-ஆம் ஆண்டு முதல் ரமேஷ் எம்எல்ஏவாக உள்ளாா். முதல்முறை தெலுங்கு தேசம் கட்சி சாா்பிலும், அதன் பிறகு 3 முறை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சாா்பிலும் அவா் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டாா்.