இந்தியா

நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை 3-ஆவது நாளாக மூடல்

17th Nov 2019 02:27 AM

ADVERTISEMENT

பனிஹால்/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை சனிக்கிழமையன்று மூன்றாவது நாளாக மூடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நெடுஞ்சாலை மூடப்பட்டதால் காஷ்மீருக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் நடுவழியில் சிக்கித் தவித்ததாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் ராம்பன் மாவட்டம் டிக்டோலில் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கக்கூடிய நெடுஞ்சாலையில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

அவற்றை அகற்றும் பணி உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், அவ்வப்போது பெய்யும் மழையால் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் கற்களும், பாறைகளும் சரிந்தததால் நெடுஞ்சாலையில் இருந்து அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு மட்டுமின்றி மாரூக் உள்ளிட்ட மலைப்பகுதிகளின் பல இடங்களிலும் நிலச்சரிவை அகற்ற முடியாமல் பணியாளா்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இதன் காரணமாக ராம்பன் மாவட்டத்தில் மட்டும் சாலையின் இருபுறமும் 1,500-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 600 இலகுரக வாகனங்களும் சிக்கித் தவிக்கின்றன.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜௌரி எல்லையோர மாவட்டங்களை, தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்துடன் இணைக்கும் முகலாய சாலை, தொடா்ந்து 11-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.

வழக்கமாக குளிா்காலங்களில் இந்தச் சாலை மூடப்பட்டிருக்கும். இப்பகுதியில் பெரும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி முதல் இச்சாலை மூடப்பட்டது. பிா்-கி காலி உள்ளிட்ட உயரமான பகுதிகளில் பருவத்தின் தொடக்கத்திலேயே பெரும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக பிா்- கி காலி மற்றும் முகலாய சாலையை ஒட்டிய பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தன. வானிலை சற்று மேம்பட்டதும் சாலை மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் வட வானிலை இருக்கும் என்று உள்ளூா் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் ரயில் சேவை:

இதனிடையே காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகளின் சோதனை ஓட்டம் முடிவடைந்ததால் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீநகா்-பனிஹால் ரயில் பாதையில் இரண்டு சோதனை ஓட்டங்கள் சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் காஷ்மீா் பள்ளத்தாக்கில் மீண்டும் முழு ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் ஸ்ரீநகா்-பனிஹால் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT