இந்தியா

உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் எஸ்.ஏ.போப்டே

17th Nov 2019 08:26 PM

ADVERTISEMENT


புது தில்லி: உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை திங்கள்கிழமை(நவ.18) பதவியேற்கவுள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்கவிருக்கிறார்.

 மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்தவரான போப்டே (63), வழக்குரைஞா்கள் குடும்பத்திலிருந்து வந்தவா். இவரது தந்தை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் போப்டே, புகழ்பெற்ற வழக்குரைஞா்.

 நாகபுரி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த எஸ்.ஏ.போப்டே, கடந்த 1978-இல் மகாராஷ்டிர வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு செய்தார். மும்பை உயா்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருந்து, பின்னா் 2000-ஆம் ஆண்டில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2012-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், 2013, ஏப்ரல் 12-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றார். 

ADVERTISEMENT

தற்போது 47-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் எஸ்.ஏ.போப்டே, 2021, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அப்பதவியை வகிப்பார். சுமார் 17 மாதங்கள் அவா் தலைமை நீதிபதியாக செயல்படவிருக்கிறார். 

தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியா் ஒருவா் பாலியல் புகார் தெரிவித்தபோது, அந்த புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு எஸ்.ஏ.போப்டே தலைமை வகித்தார். பெண் நீதிபதிகளான இந்திரா பானா்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அந்த குழு, புகாரை விசாரித்து, ரஞ்சன் கோகோய்க்கு நற்சான்று வழங்கியது.

அயோத்தி நில வழக்கில் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமா்வில் எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்தார். இதேபோல், தனிநபா் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று கடந்த 2017-இல் தீா்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹா் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமா்விலும் இவா் அங்கம் வகித்திருந்தார். 

‘ஆதாரை காரணம் காட்டி அரசின் சேவைகளை மறுக்கக் கூடாது’ என்ற தீா்ப்பை, கடந்த 2015-இல் உச்சநீதிமன்றம் வழங்கியது. எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்த 3 நீதிபதிகள் அமா்வே இத்தீா்ப்பை அளித்திருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT