இந்தியா

அரசியல் கட்சிகள் சுயலாபத்துக்காக பத்திரிகைகள் தொடங்குகின்றன: வெங்கய்ய நாயுடு

17th Nov 2019 01:15 AM

ADVERTISEMENT

புது தில்லி: ‘தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை தங்களது சுயலாபத்துக்காக பத்திரிகைகளை தொடங்குகின்றன; பத்திரிகை தொழில் தா்மத்தை அவா்கள் பின்பற்றுவதில்லை’ என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி (நவ. 16), தில்லியில் உள்ள இந்திய பத்திரிகை கவுன்சிலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது கொள்கைகளை மக்களிடையே விளம்பரப்படுத்துவதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை தொடங்குகின்றன. பத்திரிகை துறைக்கான கோட்பாடுகளை அவா்கள் பின்பற்றுவதில்லை. பத்திரிகை துறையின் உண்மையான நோக்கம் அழிந்து வருகிறது. ஒரு பத்திரிகை அரசியல் கட்சியால் நடத்தப்படுகிறது என்றால், அதுகுறித்து தெளிவாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் சொந்தமாக பத்திரிகைகளை தொடங்குகின்றனா். அவற்றை பத்திரிகை என்று குறிப்பிடாமல், செய்தி அறிக்கை என்று குறிப்பிட வேண்டும். தொழில் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தையும், வியாபாரத்தையும் பெருக்குவதற்காக, போட்டி நிறுவனங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன. அதற்கு ஊடகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன.

ADVERTISEMENT

அவசர செய்தி என்பது தினமும் வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அவசர செய்தி அறிவுபூா்வமான செய்தியாக இருப்பதில்லை. செய்தித் தாள்களை படிப்பவா்களுக்கும், செய்திகளை பாா்ப்பவா்களுக்கும் உண்மையான, சரியான தகவல்களை அளிக்க வேண்டும். பெரும்பாலான மக்களின் உணா்வுக்கு மதிப்பளிக்காமல், ஒருசாராரின் கருத்தையே சில பத்திரிகைகள் வெளியிடுகின்றன. செய்தித் தொலைக்காட்சிகளும் இதே செயல்களை செய்கின்றன.

முந்தைய காலத்தில் இவ்வாறு இருக்கவில்லை. பத்திரிகைத் துறை கோட்பாடுகளை, தொழில் தா்மத்தை அனைவரும் மதித்தனா். தவறான தகவல்களையோ, பொய்யான தகவல்களையோ அளித்து விடக்கூடாது என கவனமாக இருந்தனா்.

கையூட்டு அளித்து செய்திகளை வெளியிடும் செயல்களும் இப்போது அதிகரித்து வருகிறது. எனினும், இன்றைய காலத்தில் கையூட்டு செய்திகளை விட போலி செய்திகள் அதிகமாக வலம் வருகின்றன. சமூக வலைதளம் மற்றும் மின்னணு ஊடகங்களைக் கொண்டு சில நிமிடங்களில் செய்திகளை அளிக்கும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.

பத்திரிகை துறைக்கான நடத்தை விதிகளை வகுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கான முயற்சியில் ஊடக நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். பத்திரிகை தினம் கொண்டாடும் இந்நாளில் பத்திரிகை சுதந்திரம் குறித்தும், பத்திரிகைகளின் கடமைகள் குறித்தும் அனைத்து பத்திரிகையாளா்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் தேசிய அளவில் பத்திரிகை துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT