குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால், இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசு ஏதேனும் ஒரு காரணத்தால் கலைக்கப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் அங்கு மத்திய அரசின் கண்காணிப்பில் ஆட்சி நடைபெறும் என்பதை குறிப்பதாகும்.
இந்த வகையிலான ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356 வகை செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயங்காமல் அல்லது ஆட்சியமைக்க முடியாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படாத நிலையில், அம்மாநிலத்தின் ஆளுநரே இது குறித்து முடிவெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார். அவரது பரிந்துரையை ஏற்று மத்திய அரசு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும்.
ஒரு மாநிலத்தில் முதல்வரின் கீழ் ஆட்சி நடைபெறாமல், குடியரசுத் தலைவரின் கீழ் ஆட்சி நடைபெறுவதால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்று கூறப்படுகிறது. ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநரே, ஆலோசகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை நியமித்து மாநில ஆட்சியை வழிநடத்துவார். பொதுவாக மத்திய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி (விரிவாகப் படிக்க)
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
1980ம் ஆண்டு பிப்ரவரி 17: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி
ஷரத் பவாரின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டு, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி திரும்ப வந்ததும், மகாராஷ்டிராவில், 38 வயதே ஆன ஷரத் பவார் (மகாராஷ்டிராவின் இளம் முதல்வர்) தலைமையில் நடைபெற்று வந்த முற்போக்கு ஜனநாயக முன்னணி ஆட்சியை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1980, ஜூன் 9: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கம்
மகாராஷ்டிராவின் முதல்வராக அப்துல் ரஹ்மான் அந்துலே பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிராவின் 7வது முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அந்துலே, முதல் முறையாக மராத்தியில் குரானை கையில் பிடித்தபடி பதவியேற்றுக் கொண்டார்.