இந்தியா

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை; மத்திய அமைச்சரவையும் ஒப்புதல்?

12th Nov 2019 02:47 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார்.

ஆளுநர் பரிந்துரையை அடுத்து, புது தில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவையும் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி காரணமாக, இன்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சி ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 54 இடங்களில் வெற்றி பெற்ற என்சிபி மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.  அக்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்று இரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் இன்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முன்னதாக, இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனை (56 எம்எல்ஏக்கள்) ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதா? என்பதை திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்குள் சிவசேனை தெரிவிக்க வேண்டுமென்று ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.

 இந்நிலையில், ஆளுநரை திங்கள்கிழமை நேரில் சந்தித்த சிவசேனை இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே தலைமையிலான குழு, போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்த தங்களுக்கு 3 நாள் அவகாசம் அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது. ஆனால், அதனை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார். அடுத்த அரை மணி நேரத்திலேயே, மூன்றாவது பெரிய கட்சியான என்சிபி-க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கை மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் 105 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, ஆட்சி அமைக்க தங்களுக்கு பெரும்பான்மையில்லை என்று ஆளுநர் பகத் சிங் கோஷியாரியிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து, இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக விளங்கும் சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தீவிர முனைப்புடன் செயல்பட்ட சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

உத்தவ் தாக்கரே - சரத் பவார் சந்திப்பு: ஆளுநர் அழைப்பையடுத்து, மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத் பவார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஆதித்ய தாக்கரேவும் உடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.

சோனியாவுடன் பேச்சு: பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தங்கள் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டுமென்று உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டார். மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் விவாதித்து பதிலளிப்பதாகவும் சோனியா காந்தி, உத்தவ் தாக்கரேவிடம் கூறியதாகத் தெரிகிறது.

ஆதரவு கிடைக்கவில்லை: சரத் பவார், சோனியா காந்தி ஆகிய இருவருடனும் பேச்சு நடத்திய பிறகும், அக்கட்சிகளிடம் இருந்து உறுதியான பதிலையோ, ஆதரவுக் கடிதங்களையோ சிவசேனையால் பெற முடியவில்லை. ஆளுநர் அளித்த கால அவகாசமும் நிறைவடைய இருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் ஆதித்ய தாக்கரே தலைமையில் அக்கட்சி குழுவினர் ஆளுநரைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே, "சிவசேனை தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளனர். அதே நேரத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான அளவு ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை அளிக்க ஆளுநரிடம் மூன்று நாள் கூடுதல் கால அவகாசம் கோரினோம். ஆனால், அவகாசமளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார்' என்றார்.

ஆளுநர் மாளிகை விளக்கம்: இது தொடர்பான ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தினார். ஆனால், திங்கள்கிழமை இரவு ஆளுநரை சந்தித்த சிவசேனை கட்சி குழுவினர், எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் கடிதத்தை அளிக்கவில்லை.

மேலும் 3 நாள்கள் அவகாசம் கோரினர். ஆனால், மேலும், கால அவகாசம் அளிக்க இயலாது என்று ஆளுநர் தெரிவித்தார். இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள என்சிபி-க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் தலைமையிலான குழுவினர் ஆளுநரை நேரில் சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிவரை என்சிபி-க்கு ஆளுநர் கால அவகாசம் அளித்தார்.

ஆனால் அதற்கு முன்பே, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

Tags : Maharashtra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT