இந்தியா

ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் காயம்

12th Nov 2019 02:44 AM

ADVERTISEMENT

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் விரைவு ரயிலுடன், எம்எம்டிஎஸ் ரயில் மோதியதில் 13 பேர் காயமடைந்தனர்.
 இந்த விபத்தின்போது எம்எம்டிஎஸ் ரயிலின் என்ஜின் கேபினுக்குள்ளாக சிக்கிக் கொண்ட அதன் ஓட்டுநர் சுமார் 2 மணி போராட்டத்துக்குப் பிறகு காயங்களுடன் மீட்கப்பட்டார்.
 இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
 ஹைதராபாத்தில் உள்ள கச்சிகூடா ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை கர்ணூல்-ஹைதராபாத் ஹிந்திரி இண்டர்சிட்டி விரைவுரயில் நின்றுகொண்டிருந்தது.
 அப்போது, மலக்பேட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த லிங்கம்பள்ளி-ஃபலக்னுமா எம்எம்டிஎஸ் ரயில் சமிக்ஞைகளை மீறிய வகையில் வந்து, இண்டர்சிட்டி ரயில் மீது மோதியது.
 இதில் பயணிகள் 12 பேர் காயமடைந்தனர். எம்எம்டிஎஸ் ரயில் இன்ஜினின் முன்பாகம் மிகவும் சேதமடைந்ததால் அதன் ஓட்டுநர் தனது கேபினுக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். காயமடைந்த நிலையில் இருந்த அவரை மீட்பதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. அதுவரை அவருக்கு பிராணவாயுவும், முதலுதவி சிகிச்சையும் வழங்கப்பட்டன. மீட்கப்பட்ட பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 இந்த விபத்தில் எம்எம்டிஎஸ் ரயிலின் 6 பெட்டிகளும், இண்டர்சிட்டி விரைவு ரயிலின் 3 பெட்டிகளும் சேதமடைந்தன. எம்எம்டிஎஸ் ரயில் மெதுவாக வந்து மோதியதால் பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழவில்லை.
 இழப்பீடு: விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்.
 இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு விபத்துக்குள்ளான வழித்தடத்தை சீர் செய்தனர்.
 இந்த விபத்து காரணமாக, இதே வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு ரயில் ரத்து செய்யப்பட்டது.
 மற்றொரு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT