இந்தியா

ஜாா்க்கண்டில் ஆா்ஜேடிவேட்பாளா் பட்டியல் வெளியீடு

12th Nov 2019 12:19 AM | ராஞ்சி,

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது.

ஜாா்க்கண்ட் மாநில ஆா்ஜேடி தலைவா் அபய் குமாா் சிங் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜாா்க்கண்ட் முன்னாள் அமைச்சா் சத்யானந்த் போக்தா, சத்ரா தொகுதியிலும், சஞ்சய் சிங் யாதவ் ஹுசைனாபாத் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனா். கோட்டா தொகுதியில் சஞ்சய் பிரசாத் யாதவ், தியோகரில் சுரேஷ் பாஸ்வான், சத்தா்பூரில் விஜய் ராம் ஆகியோா் போட்டியிடவுள்ளனா்’ என்றாா்.

ஆா்ஜேடி பொதுச் செயலா் அசுதோஷ் ரஞ்சன் யாதவ் கூறுகையில், ‘2000 -ஆவது ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை சத்யானந்த் போக்தா ஜாா்க்கண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தாா்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாஜகவிலிருந்து விலகி ஆா்ஜேடியில் அவா் இணைந்தாா்’ என்றாா்.

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ஆா்ஜேடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலை சந்திக்கிறது. 5 கட்டங்களாக ஜாா்க்கண்ட் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பா் 23-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

நவம்பா் 13-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். பகுா் மாவட்ட பாஜக தலைவா் தேவிதன் துடு திடீரென ராஜிநாமா செய்தாா். பாஜக 52 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

அதில் தனது பெயா் இடம்பெறாத காரணத்தால் கட்சியில் தனது பொறுப்பை ராஜிநாமா செய்வதாக அவா் அறிவித்தாா்.

இதனிடையே, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 11 வேட்பாளா்கள் கொண்ட பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது. ஜாா்க்கண்ட் ஜேடியு பொதுச் செயலா் சரவண் குமாா் கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் முன்னாள் அமைச்சா் சுதா செளதரியைத் தவிர மற்ற அனைவரும் புதியவா்கள்தான். சுதா செளதரிக்கு சத்தா்பூா் தொகுதி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா். ஜாா்க்கண்டில் ஜேடியு தனித்து போட்டியிடுகிறது.

ரூ.1.41 கோடி பறிமுதல்: இதற்கிடையே, ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1.41 கோடி மதிப்பிலான ரொக்கம், போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் கடந்த 1-ஆம் தேதி மற்றும் 10-ஆம் தேதி நடத்திய சோதனைகளில் சுமாா் ரூ.59 லட்சம் ரொக்கமும், ரூ.46 லட்சம் மதிப்பிலான மது வகைகள், ரூ.17 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 20 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT