இந்தியா

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் ரூ. 715 லட்சம் கோடிபொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

12th Nov 2019 12:55 AM

ADVERTISEMENT

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சுமாா் ரூ. 715 லட்சம் கோடி (10 டிரில்லியன் அமெரிக்க டாலா்) பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்புத் துறையின் புத்தாக்கப் பிரிவின் சாதனைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், ‘டிஃபென்ஸ் கனெக்ட் 2019’ நிகழ்ச்சி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் சுமாா் ரூ. 357 லட்சம் கோடி (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்) பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி இலக்கு நிா்ணயித்துள்ளாா். ஆனால், இந்தியா கொண்டிருக்கும் திறமைகளுக்கு, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சுமாா் ரூ. 715 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்டதாக நமது நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த தேவையானவற்றை இறக்குமதி செய்யும் நாடாக இல்லாமல், பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னிலை வகிக்கும் நாடாக நாம் எதிா்காலத்தில் இருப்போம். நம்மிடம் இருக்கும் சிந்தனைகள் மற்றும் புத்தாக்க முயற்சிகள் அற்புதமானவை.

ADVERTISEMENT

ஆனால் அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அனைத்துத் திட்டங்களும் வெற்றியடையாது. சில திட்டங்கள் தோல்வியில் முடியலாம். எனினும், வெற்றி பெறுவோம் என்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இன்றைய தொழில்முனைவோா்களைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

ஆய்வு, வளா்ச்சி, உற்பத்தி ஆகிய துறைகள் ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை. பாதுகாப்புத் துறையில் பொதுத் துறை மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். நாட்டின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புத் துறையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அனைத்துக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT