இந்தியா

1 மணி நேரத்தில் நிறைவடையவுள்ள ஆளுநர் அவகாசம்: சோனியாவுடன் உத்தவ் தாக்கரே பேச்சு!

11th Nov 2019 06:42 PM

ADVERTISEMENT


சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் அரசு அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆதரவு கோரியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும், 'ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர்' ஆகிய விவகாரங்களில் இரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்து வந்தது.

தேர்தலுக்கு முன் இதுபோன்ற ஒப்பந்தம், நிர்பந்தம் எதுவும் போடப்படவில்லை என பாஜக திட்டவட்டமாக தெரிவித்தது. சிவசேனையோ பேச்சுவார்த்தை என்றால் அது முதல்வர் பதவி குறித்து மட்டுமே என தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதில் தீர்வு எட்டப்படாததால் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பாஜக மற்றும் சிவசேனை பரஸ்பரம் குற்றம்சாட்டின.

இதன்பிறகு, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க உரிமை கோருவதில்லை என பாஜக முடிவெடுத்தது. இதையடுத்து, சிவசேனை கட்சியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும், இதுகுறித்து முடிவெடுக்க இன்று (திங்கள்கிழமை) இரவு 7.30 மணி வரை சிவசேனைக்கு அவகாசமும் வழங்கினார்.

ADVERTISEMENT

இதனால் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனை வெளியேற வேண்டும் என  நிபந்தனை விதித்தது. இதன்படி, சிவசேனை எம்பியும் மத்திய அமைச்சருமான அரவிந்த் சாவந்தும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார்.

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனை எம்.பி. ராஜிநாமா

இந்நிலையில், சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசி மூலமாக பேசியுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய காரியக் கமிட்டி கூட்டமும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உத்தவ் தாக்கரே சோனியா காந்தியிடம் தொலைபேசி மூலம் பேசியதற்கு மத்தியில், ஜெய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்கள் சிலரிடம் சோனியா காந்தி பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், சிவசேனை ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனைக்கு ஆளுநர் வழங்கிய அவகாசம் இன்னும் 1 மணி நேரத்தில் நிறைவடையவுள்ளதால், அடுத்த 1 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் திருப்பங்களுக்கு ஒரு விடை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT