இந்தியா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை விலகல்!

11th Nov 2019 12:56 PM

ADVERTISEMENT

 

ஆட்சியில் சமபங்கு மற்றும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்டவை தொடர்பாக சிவசேனை அழுத்தமாக வலியுறுத்தி வந்தது. இதனால் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக, சிவசேனை இடையே இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. 

இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைக்குமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார். இதன் மூலம் மகாராஷ்டிர அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறுகையில்,

ADVERTISEMENT

பாஜக-வின் அனைத்து நடவடிக்கைகளும் சிவசேனைக்கு எதிராகவே அமைந்து வருகிறது. நாங்கள் ஆட்சி செய்வதை பாஜக விரும்பவில்லை. எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனியும் தொடருவதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க போதுமான ஆதரவு எங்களிடம் இல்லை. எனவே ஆட்சியமைக்க உரிய ஆதரவு உள்ளவர்கள் அதற்கு உரிமை கோரலாம். இதில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. 

இதில் சிவசேனை தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துவிட்டோம். இனி அனைவருக்கும் ஏற்புடைய குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்வதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சரும், சிவசேனை எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த் அறிவித்தார்.

ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையென்ற நிலையில், 54 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ், 44 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும் பட்சத்தில் சிவசேனை கட்சியால் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT