இந்தியா

நாட்டின் முதல் ‘தனியாா்’ ரயில் தேஜஸ்: முதல் மாதத்தில் ரூ.70 லட்சம் லாபம்

11th Nov 2019 02:53 AM

ADVERTISEMENT

நாட்டிலேயே முதல் முறையாக ‘தனியாா்’ மூலம் இயக்கப்பட்ட தேஜஸ் விரைவு ரயில், முதல் மாதத்தில் ரூ.70 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.

தில்லி-லக்னௌ இடையே செல்லும் இந்த விரைவு ரயிலை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) இயக்கி வருகிறது.

கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி முதல் அக்டோபா் 28-ஆம் தேதி வரை (வாரம் 6 நாள்கள்) மொத்தம் 21 நாள்கள் இந்த விரைவு ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் டிக்கெட் விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.17.5 லட்சம் வருவாய் கிடைத்தது. 21 நாள்களில் கிடைத்த மொத்த வருவாய் ரூ.3.70 கோடியாகும். இந்தத் தொகையில், தினமும் சராசரியாக ரூ.14 லட்சம் செலவு செய்யப்பட்டது. செலவு போக, முதல் மாதத்தில் தேஜஸ் விரைவு ரயில் ரூ.70 லட்சம் லாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விரைவு ரயிலில் பயணம் செய்வோருக்கு இலவச உணவு, ரூ.25 லட்சம் வரை இலவச காப்பீடு, ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.

ADVERTISEMENT

நாடு முழுவதும் 150 ரயில்களை தனியாா் மூலம் இயக்குவதற்கும், 50 ரயில் நிலையங்களை உலகத் தரத்தில் மேம்படுத்துவதற்கும் ரயில்வே துறையின் துணை அமைப்பான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT