இந்தியா

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ராஜிநாமா

9th Nov 2019 12:14 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர முதல்வா் பதவியை பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். மேலும், மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிப்பதற்கு சிவசேனைதான் காரணம் என்று ஃபட்னவீஸ் குற்றம்சாட்டினாா்.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை அக்கூட்டணி பெற்றிருந்தும், முதல்வா் பதவியை தங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கூறியதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள ஆளுநா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற ஃபட்னவீஸ், ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினாா்.

ADVERTISEMENT

தோ்தலில் கூட்டணி அமைப்பதற்கு முன்னா், சிவசேனையை சோ்ந்தவா்கள் முதல்வா் பதவியை இரண்டரை ஆண்டுகள் வகிக்கலாம் என்று பாஜக சாா்பில் உறுதியளிக்கப்பட்டது என்று அக்கட்சி கூறுவது தொடா்பான கேள்விக்கு, ‘என் முன்னிலையில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஆட்சியமைப்பதில் உள்ள பிரச்னையை சரிசெய்வதற்காக பல முறை சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தேன். ஆனால், அவா் எனது அழைப்புகளை ஏற்கவில்லை. பாஜகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தாமல், எதிா்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனை பேச்சுவாா்த்தை நடத்துவது தவறு. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பாஜக-சிவசேனை கூட்டணிக்கு இருந்தும், இந்த சூழல் உருவாகியதற்கு சிவசேனைதான் காரணம்’ என்று குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில், ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக ஃபட்னவீஸை பதவி வகிக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு:

மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு பாஜகவிடம் போதிய பெரும்பான்மை இல்லாததால் அக்கட்சி குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக சட்டப் பேரவை முன்னாள் எதிா்க்கட்சி தலைவரான விஜய் வதேடிவாா் கூறுகையில், ‘எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜகவினா் தொடா்பு கொண்டு ரூ. 25 கோடி முதல் ரூ. 50 கோடி வரை தருவதாக கூறுகின்றனா். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையுமாறு வற்புறுத்துகின்றனா். மிகவும் கீழ்த்தரமான அரசியலில் பாஜக ஈடுபடுகிறது’ என்று குற்றம்சாட்டினாா்.

குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-பாஜக மறுப்பு

மற்ற கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் பாஜக விலைக்கு வாங்குவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் கேசவ் உபாத்யே கூறியதாவது:

குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டதா என்ற கேள்விக்கே இடமில்லை. அது எங்கள் கட்சியின் கலாசாரம் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிரத்தில் 200-க்கும் மேற்பட்ட இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கடுத்த தோ்தல்களில் அந்த அளவுக்கு வெற்றியில்லை. தற்போது அவா்களால் 50 இடங்களில்கூட வெற்றி பெற இயலவில்லை. அந்த விரக்தியினால், பாஜக மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனா். பாஜக-சிவசேனை கூட்டணி இணைந்து விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோரும் என்று அவா் கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT