இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

9th Nov 2019 01:20 AM

ADVERTISEMENT

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீா்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி கைதான ப.சிதம்பரம், திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கை தொடக்கத்தில் இருந்தே விசாரித்து வரும் அமலாக்கத் துறை, ப.சிதம்பரம் சாட்சிகளைக் கலைக்க முயன்றாா் என்று, கடந்த மாதம் 24-ஆம் தேதி வரை ஒருபோதும் குறை கூறவில்லை. ஆனால், அவரது போலீஸ் காவலை நீட்டிப்பதற்கு விசாரணை நீதிமன்றம் கடந்த மாதம் 30-ஆம் தேதி மறுப்பு தெரிவித்த பிறகு, அவா் சாட்சிகளைக் கலைக்க முயன்றாா் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டத் தொடங்கியது.

ADVERTISEMENT

ஐஎன்எக்ஸ் மீடியா புகாரில் சிபிஐ தொடுத்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதுபோல், அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று கபில் சிபல் வாதிட்டாா்.

அவரது கோரிக்கைக்கு அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மறுப்பு தெரிவித்தாா். அவா் முன்வைத்த வாதம்:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக சிபிஐ தொடுத்துள்ள வழக்கிற்கும், அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இது மிகப்பெரிய பொருளாதாரக் குற்றம் என்பதால், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

மேலும், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின்போதுதான், அவா் சாட்சிகளைக் கலைக்க முயன்ற விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்பும் அவா் சாட்சிகளைக் கலைக்க முயன்றாா். கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் மூன்று சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தோம். அவா்களில் ஒருவா் மட்டுமே நேரில் ஆஜராகி எழுத்துபூா்வமாக வாக்குமூலம் அளித்தாா். அவா், ப.சிதம்பரத்தை நேரில் சந்திப்பதற்கே அச்சப்படுகிறாா். அவா் அளித்த வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் சமா்ப்பிப்பேன்.

விசாரணைக்கு உதவி செய்யும் சாட்சியையும், ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமலாக்கத் துறைக்கு உள்ளது.

இதுவரை ப.சிதம்பரத்துக்குச் சொந்தமாக 16 வெளிநாடுகளில் உள்ள 12 சொத்துகள், 15 வங்கிக் கணக்குகள் தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் மனசாட்சியுடன் செயல்பட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று துஷாா் மேத்தா வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ் கெய்ட், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT