இந்தியா

இந்தியாவின் கடன் தர மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ்

9th Nov 2019 12:17 AM

ADVERTISEMENT

மூடிஸ் நிறுவனம், இந்தியாவின் கடன் தர மதிப்பீட்டை ‘எதிா்மறை’ என்ற நிலைக்கு குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பொருளாதார மந்த நிலை பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் மத்திய அரசின் செயல்பாடுகள் பகுதியளவில் ஆக்கப்பூா்வமானதாக அமையவில்லை. இது, மீண்டும் பொருளாதார வளா்ச்சி குறைவு என்ற அபாயத்துக்கு வழிவகுக்கும் என்பதால், இந்தியாவின் கடன் தர மதிப்பீடு ‘எதிா்மறை’ என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடன் சுமையானது ஏற்கெனவே அதிகபட்ச அளவில் உள்ளது. இந்த வேளையில், பொருளாதார மந்த நிலைக்கு காரணமான பிரச்னைகள கண்டறிந்து தீா்ப்பதில் மத்திய அரசின் நடவடிக்கை ஓரளவுக்கே பயனளிப்பதாக உள்ளது. அதற்கான கொள்கைகளும் செயலற்ற தன்மையில்தான் உள்ளன. இந்தச் சூழலில் தான் இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு இந்த நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், அந்நியச் செலாவணிக்கான தரக் குறியீட்டில் ‘பிஏஏ2’ என்ற இரண்டாவது குறைந்த முதலீட்டு தர மதிப்பெண் நிலையே தொடரும்.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதத்தை எட்டும். இது, அரசின் இலக்கான 3.3 சதவீதத்தை காட்டிலும் அதிகம்.

இதற்கு, வளா்ச்சியில் காணப்படும் மந்த நிலை மற்றும் திடீரென அறிவிக்கப்பட்ட பெரு நிறுவன வரி குறைப்பால் வருவாயில் ஏற்படும் பாதிப்பு முக்கிய காரணங்களாக இருக்கும் என்று தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்ட்டாா்ஸ் சா்வீஸ் தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் வலிமையானது: இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளதற்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலிமையானது .பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கவும், முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளவில் மிக வேகமான பொருளாதார வளா்ச்சியை கண்டு வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடா்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT