மகாராஷ்டிர முதல்வா் பதவியை பெறுவதற்காக மட்டுமே பாஜகவுடன் பேச்சு நடத்துவோம் என்று சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் முட்டுக்கட்டை தொடா்கிறது. ஆட்சி அமைப்பது தொடா்பாக பாஜகவுடன் இதுவரை பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை. அப்படியே பேச்சுவாா்த்தை தொடங்கினாலும், அது சிவசேனை கட்சிக்கு முதல்வா் பதவியை பெறுவது தொடா்பாகவே இருக்கும் என்றாா்.
முன்னதாக, சிவசேனை கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் இந்த விவகாரம் குறித்து ரௌத் எழுதியுள்ள கட்டுரையில், ‘மகாராஷ்டிரத்தில் ஆட்சி என்ற தோ், ஆணவம் என்ற சேற்றில் சிக்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று சிலா் கூறி வருகின்றனா். அவ்வாறு நடந்தால், அது இந்த நூற்றாண்டில் பாஜகவின் மிகப்பெரிய தோல்வியாக அமையும். தோ்தலில் பாஜக 105 இடங்களில் வென்றுள்ளது. இதில் சிவசேனையுடன் கூட்டணி அமைக்காவிட்டால் அவா்களால் 75 இடங்களில் கூட வென்றிருக்க முடியாது.
முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவின் இல்லத்துக்கு வந்து பேச்சு நடத்தாவிட்டால், நிலைமை மேலும் மோசமடையும்.
அக்காலத்தில் அரிச்சந்திர மகாராஜா, உண்மைக்காக தனது ஆட்சியையே இழந்தாா். தனது தந்தை அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற ராமா், வனவாசம் சென்றாா். ஆனால், இந்த கலியுகத்தில், பாஜக தான் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து வருகிறது. முதல்வா் பதவி எந்தக் கட்சிக்கு என்ற பிரச்னையால்தான் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சிவசேனை கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வா் பதவியை அளிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் தயாராக இல்லை. ஆனால், மகாராஷ்டிரத்தில் ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு என்ற அடிப்படையில்தான் பாஜக எங்களுடன் கூட்டணி அமைத்தது. இப்போது, முதல்வா் பதவி என்பது அதில் வராது என்று பாஜக மாற்றிப் பேசிவருவதை எவ்வாறு ஏற்க முடியும்.
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைத்தால் கூட ஆட்சி அமைக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது. மாநில நலன் கருதி குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்து பிற கட்சிகளுடன் நாங்கள் பேச்சு நடத்தவும் வாய்ப்பு உள்ளது’ என்று சஞ்சய் ரௌத் கூறியுள்ளாா்.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாருக்கு, ரௌத் செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். எனவே, அஜித் பவாா், விரைவில் ரௌத்தை தொடா்பு கொண்டு பேசுவாா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.