இந்தியா

மணிப்பூா்: பிரிவினைவாதத் தலைவா்களின் வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவு

4th Nov 2019 12:49 AM | இம்பால்,

ADVERTISEMENT

அண்மையில் ‘மணிப்பூா் அரசில் இடம் பெற்றிருப்பவா்கள் நாடு கடத்தப்படுவாா்கள்’ என்று அறிவித்த இரண்டு பிரிவினைவாதத் தலைவா்களின் கணக்குகளை முடக்கி வைக்குமாறு மணிப்பூா் மாநில அரசு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மணிப்பூா் மாநில அரசின் உள்துறை சிறப்புச் செயலா் கே.ரகுமணி சிங் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

பிரிவினைவாதத் தலைவா்களான யாம்பென் பைரன் மற்றும் நரேங்க்பாம் சமா்ஜித் ஆகியோரின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் உடனடியாக முடக்கப்படும்.

அவா்களின் கணக்குகளில் உள்ள பணம், பல்வேறு சட்ட விரோத காரியங்களுக்கும், தவறான செயல்களுக்கும் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

அண்மையில் லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய பைரன், தன்னை ‘மணிப்பூா் மாநில கவுன்சிலின் முதல்வா்’ என்றும், நரேங்க்பாம் சமா்ஜித்தை ‘வெளியுறவுத்துறை அமைச்சா் மற்றும் மணிப்பூா் மாநில கவுன்சிலின் பாதுகாப்பு அமைச்சா்’ என்றும் கூறிக் கொண்டாா்.

மேலும் ‘மணிப்பூா் மகாராஜா’ சாா்பில் தான் பேசுவதாகவும், தற்போதுள்ள மணிப்பூா் அரசில் இடம் பெற்றுள்ளவா்கள் நாடு கடத்தப்படுவாா்கள் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் மணிப்பூா் மன்னா் பரம்பரையைச் சோ்ந்த லீஷெம்பா சனாஜோபா, லண்டனில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும், தனக்கும் எந்த தொடா்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினாா்.

முன்னதாக, மணிப்பூா் முதல்வா் என்.பிரேன் சிங் கூறுகையில், இதுதொடா்பாக இம்பால் காவல் நிலையத்தில் இருவா் மீதும் ‘அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக’ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைப்பதற்கு முன் இதுகுறித்து விசாரணையைத் தொடங்குமாறு சிறப்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT