தில்லியிலும், துணை நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று மாசு அளவு பல இடங்களில் "மிகவும் கடுமை' பிரிவை நெருங்கியது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் காற்றின் மாசு ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
மாசு காரணமாக நகரை விட்டு வெளியேற விரும்புவதாக சமூக ஊடங்களில் பொதுமக்கள் பலரும் கருத்தை பதிவிட்டிருந்தனர்.
தில்லியில் காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் ஜனவரியில் இருந்து முதல் முறையாக காற்று மாசின் அளவு கடந்த வெள்ளிக்கிழமை அவசரநிலைப் பிரிவில் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அத்துடன், பொது சுகாதார அவசரநிலையை உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கடுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) அறிவித்தது.
இந்நிலையில், தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடானது காற்றின் வேகம் சிறிது அதிகரித்ததன் காரணமாக சனிக்கிழமை மாலை 399 புள்ளிகளாக கீழிறங்கியது. எனினும், காற்று வேகம் இன்மையால் சனிக்கிழமை இரவுக்குள்ளாகவே மாசு அளவு அதிகரித்ததாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 483 ஆக இருந்தது. ஆனால், மாலை 4 மணியளவில் இது 494 ஆக அதிகரித்திருந்ததாகவும், கடந்த 2016, நவம்பரில்தான் தில்லியில் அதிகபட்சமாக 497 ஆக மாசு அளவு பதிவாகி இருந்ததாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்தனர்.
தில்லியில் உள்ள 37 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில் 21 நிலையங்களில் குறிப்பாக ஆயா நகர், அசோக் விஹார், ஆனந்த் விஹார், அரவிந்தோ மார்க் ஆகிய இடங்களில் மாலை 7 மணியளவில் காற்றின் தரமானது 490 மற்றும் 500-க்
கும் இடையே காணப்பட்டது.
தேசியத் தலைநகர் வலயத்தில் (என்சிஆர்) ஃபரீதாபாதில் 493, நொய்டாவில் 494, காஜியாபாதில் 499, கிரேட்டர் நொய்டாவில் 488, குருகிராமில் 479 என்ற அளவில் மாசு பதிவாகி இருந்தது.
மத்திய அரசின் அமைப்பின் சஃபர் தகவலின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 5 மணியளவில் 708 ஆகவும், இது பாதுகாப்பான அளவை விட 14 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக தில்லி, என்சிஆர் பகுதியில் நவம்பர் 5-ஆம் தேதி வரை அனைத்து கட்டுமான செயல்பாடுகளுக்கும் இபிசிஏ தடைவிதித்துள்ளது.
37 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
மாசு காரணமாக தில்லி விமான நிலையத்தில் காண்புதிறன் குறைந்ததால் 37 விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தில்லிக்கு வந்த 37 விமானங்கள் ஜெய்ப்பூர், அமிருதசரஸ், லக்னௌ, மும்பை ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன' என்றனர்.
இதில், ஏர் இந்தியாவின் 12 விமானங்களும், 5 விஸ்டாரா விமானங்களும் அடங்கும்.