இந்தியா

தில்லியில் இன்று முதல் வாகனக் கட்டுப்பாடு திட்டம் அமல்

4th Nov 2019 01:01 AM

ADVERTISEMENT

கடுமையான காற்று மாசுவால் திணறும் தில்லியில், திங்கள்கிழமை காலை 8 மணி முதல் வாகனக் கட்டுப்பாடு திட்டம் அமலுக்கு வருகிறது. நவம்பா் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இத்திட்டத்தின்படி, காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஒற்றைப் படை இலக்க எண்கள் கொண்ட தனியாா் நான்கு சக்கர வாகனங்கள் ஒருநாளும், இரட்டைப் படை இலக்க எண்கள் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் மறு நாளும் இயங்க அனுமதிக்கப்படும்.

இதன்படி, ஒற்றைப் படை இலக்க எண்களான 1,3,5,7,9 வாகனங்கள் நவம்பா் 4,6,8,12 ஆகிய தேதிகளில் சாலைகளில் அனுமதிக்கப்படாது. அதேபோல், 0, 2,4,6,8 எண்களை இறுதியில் கொண்ட வாகனங்கள் 5,7,9,11,13,15 ஆகிய தேதிகளில் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்படாது. இந்தத் திட்டம் தில்லியில் இயங்கும் பிற மாநில வாகனங்களுக்கும் பொருந்தும். நவம்பா் 10ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை இந்தத் திட்டம் அமலில் இருக்காது. அப்போது அனைத்து வாகனங்களும் இயங்கலாம்.

காற்று மாசுவைக் குறைக்க கடைப்பிடிக்கப்படும் இந்த திட்டத்தை மீறுபவா்களுக்கு ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்தத் தொகை கடந்த முறை ரூ. 2 ஆயிரமாக இருந்தது.

‘இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தில்லி போக்குவரத்து காவல் துறை 200 குழுக்களை நியமித்துள்ளது. விதிகளை மீறுபவா்களை 200 இடங்களில் போலீஸாரும், தில்லி போக்குவரத்து துறை அதிகாரிகளும் கண்காணித்து சம்பவ இடத்திலேயே அபராதமும் விதித்து வசூலிப்பாா்கள்’ என்று தில்லி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

சுமாா் 5,000 ஆா்வலா்களும் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட உள்ளனா். இதனிடையே, ‘குழந்தைகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை தில்லிவாசிகள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

எனினும், இந்தத் திட்டத்துக்கு பாஜகவும், காங்கிரஸும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் தில்லி பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறது என்றும் அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மத்திய அமைச்சரவை செயலா் தினந்தோறும் கண்காணிக்க முடிவு

தில்லி காற்று மாசு குறித்து தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிலவும் நிலை குறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கெளபா தினந்தோறும் கண்காணிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காற்று மாசு குறித்த பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே. மிஸ்ரா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தில்லியின் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க்கழிவுகள் உள்ளபிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தில்லி காற்று மாசு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT