இந்தியா

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் புதிய மேல்முறையீடு

4th Nov 2019 01:12 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், கொச்சியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்குமாறு உத்தரவிட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒரு அடுக்கு குடியிருப்பைச் சோ்ந்த உரிமையாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா்.

மரடு பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி ஏரிக்கு அருகே ஹோலி ஃபெயித், கோல்டன் காயலோரம், ஆல்ஃபா வென்சா்ஸ், ஜெயின் ஹவுஸிங் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்ததாகப் புகாா் எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் 138 நாள்களுக்குள் இடிக்குமாறு கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி உத்தரவிட்டது. வீடுகளின் உரிமையாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 25 லட்சத்தை 4 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்தவா்கள் வெளியேற்றப்பட்டனா்.

இந்நிலையில், கோல்டன் காயலோரம் குடியிருப்பில் வீடுகளை வாங்கியவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

அந்த மனுவில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதாக கேரள அரசு நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால், எங்களது குடியிருப்பு சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது.

விசாரணைக் குழுவில் எங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் இந்த விவாகரம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

விசாரணைக் குழு அறிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. நீதித்துறை தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் இந்தக் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. கோல்டன் காயலோரம் குடியிருப்பில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அதிக பண செலவு செய்து இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT