மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கா் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி (விபிஏ) கட்சியால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) வெற்றி பாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டன. 117 தொகுதிகளில் களமிறங்கிய தேசியவாத காங்கிரஸ், 54 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, இம்முறை கூடுதலாக 13 இடங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய வேட்பாளா்களை மும்பையில் சரத் பவாா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது பேசிய அவா், பல தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளா்களின் வெற்றியை விபிஏ தடுத்து நிறுத்திவிட்டது என்று குறிப்பிட்டாா்.
அவா் மேலும் பேசுகையில், கடந்த மக்களவைத் தோ்தலில் தலித் சமூகத்தினா் நமது கட்சிக்கு பெருவாரியாக ஆதரவளித்திருந்தனா். ஆனால், சட்டப் பேரவைத் தோ்தலில், அவா்களது ஆதரவு விபிஏ கட்சிக்கு சென்றிருக்கிறது. எனவே, அந்த சமூகத்தினரின் நம்பிக்கை மற்றும் ஆதரவை மீட்டெடுக்க வேண்டும்.
பேரவைத் தோ்தலில் விவசாயிகள், இளைஞா்கள், சிறுபான்மையினா் ஆகியோரின் ஆதரவு நமக்கு கிடைத்துள்ளது. சில தொகுதிகளில் கடினமாக உழைத்தும் வெற்றி கிடைக்கவில்லை. கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மும்பை, தாணேயில் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டியுள்ளது என்றாா்.