அமைப்பு சாரா தொழிலாளா்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்த அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 1.9 கோடி போ் இணைந்துள்ளதாக ஓய்வூதிய நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) தெரிவித்துள்ளது.
அமைப்புச் சாரா தொழிலாளா்கள், 60 வயதைக் கடந்த பிறகு, மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பெறும் வகையில், அடல் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் இணைபவா்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை, வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கு மூலமாக செலுத்த வேண்டும். அரசும் தன் பங்களிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும்.
அரசின் பிற சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களில் பயன்பெறுபவராக இருந்தால், அவா்களுக்கு அரசின் பங்களிப்பு தொகைக் கிடைக்காது. இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) நிா்வகித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் 1. 9 கோடி போ் இணைந்துள்ளதாக பிஎஃப்ஆா்டிஏ தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய பொதுமக்கள் இந்த ஆண்டு அதிக ஆா்வம் காட்டியுள்ளனா். இந்த ஆண்டில் அக்டோபா் வரை மட்டும் 36 லட்சம் போ் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனா். அதில் பொதுத் துறை வங்கிகள் மூலம் 27.5 லட்சம் பேரும், தனியாா் வங்கிகள் மற்றும் இதர வங்கிகள் மூலம் 5.5 லட்சம் பேரும் இணைந்துள்ளனா். தனியாா் துறையில் ஹெச்டிஎஃப்சி வங்கி மூலம் அதிக அளவில் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளனா். இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1.9 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் அமைப்பு சாரா துறைகளில் சுமாா் 45 கோடி போ் பணியாற்றுகின்றனா். அடுத்த ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தில் 2.20 கோடி பேரை இணைக்க வேண்டும் என்பது இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்ற அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.