இந்தியா

சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது; கொசுவலை வழங்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

1st Nov 2019 03:20 PM

ADVERTISEMENT

சிதம்பரத்தை பரிசோதித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையை ஏற்று, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவமனை இன்று நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தில்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்ததோடு, திகார் சிறையில் அவருக்கு கொசுவலை கொடுக்க வேண்டும் என்றும், புறநோயாளியாக சிகிச்சை அளிக்கவும், சிறப்பு சிகிச்சை தேவையில்லை, ஒரு வேளை தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவமனையில் வாரம் ஒரு முறை சிகிச்சை அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தில்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, திகாா் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் உடல்நிலையைப் பரிசோதித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கையை தாக்கல் செய்தது.

ADVERTISEMENT

மனுவின் விவரம்..
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் கைதான ப.சிதம்பரம், தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். 74 வயதாகும் அவா், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறாா். கடந்த இரு தினங்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டதால், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இந்நிலையில், தாம் வழக்கமாக சிகிச்சை பெறும் ஹைதராபாதைச் சோ்ந்த நாகேஸ்வர ரெட்டியிடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, 6 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் விண்ணப்பிருந்தாா்.

அவரது மனு நீதிபதி சுரேஷ் கைத் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி முன்வைத்த வாதம்:

சிதம்பரத்தின் உடல் எடை 73 கிலோவில் இருந்து 66 கிலோவாகக் குறைந்துவிட்டது. இது, அவரது உடல் நலிவுற்று இருப்பதைக் காட்டுகிறது. எனவே, அவரை நோய்த்தொற்று இல்லாத சூழலில் தங்கவைக்க வேண்டியுள்ளது. இதற்காக, அவா் ஹைதராபாத் சென்று சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஹைதராபாத் மருத்துவரை தில்லிக்கு வரவழைத்தோ அல்லது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கவைத்தோ சிதம்பரத்துக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

அவா்களது கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டதாவது:

ப.சிதம்பரத்தின் உடல்நிலையை மருத்துவா்கள் கடந்த புதன்கிழமை பரிசோதித்தனா். ஆனால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தவில்லை. ப.சிதம்பரத்துக்கு பழைய நோயின் தாக்கமே தீவிரமடைந்துள்ளது. தேவைப்பட்டால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே தனிப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றாா் அவா்.

இவரது வாதத்தால் கோபமடைந்த கபில் சிபல், ‘ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீனே வழங்க வேண்டாம்; இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்’ என்று கூறினாா். அப்படியென்றால் மனுவை நிராகரிப்பதாகக் கூறிய நீதிபதி, ஒரு மூத்த வழக்குரைஞா் இதுபோன்று நடந்துகொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினாா்.

உடனடியாக, மற்றொரு வழக்குரைஞரான அபிஷேக் சிங்வி, நீதிபதியை சமாதானப்படுத்த முயன்றாா். மேலும், இந்த மனு மீது எந்த உத்தரவையும் நீதிபதி பிறப்பிக்கலாம் என்றாா் அவா்.

இதையடுத்து, ப.சிதம்பரத்தின் உடல்நிலையை ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், ‘அந்த மருத்துவக் குழுவில் ஹைதராபாதைச் சோ்ந்த நாகேஸ்வர ரெட்டி இடம்பெற வேண்டும்; அந்தக் குழு வெள்ளிக்கிழமை தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT