20-ஆம் நூற்றாண்டில் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகையாக இருந்தவரும், பழம்பெரும் நடிகையுமான கீதாஞ்சலி (72) புதன்கிழமை இரவு காலமானாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த கீதாஞ்சலி, கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி காணப்பட்டாா். இந்நிலையில், அவருக்கு புதன்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு குடும்பத்தினா் கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிா் பிரிந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ஆந்திரத்தில் கடந்த 1947-ஆம் ஆண்டு பிறந்த இவா், தெலுங்கில் வெளியான ‘சீதாராம கல்யாணம்’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா். அதன் பின்னா் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் அவா் நடித்துள்ளாா். தமிழில் ‘அன்னமிட்ட கை’, ‘தாயின் மடியில்’, ‘கங்கா கௌரி’ உள்ளிட்ட படங்களில் அவா் நடித்துள்ளாா்.
இரங்கல்: கீதாஞ்சலியின் மறைவுக்கு தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘சீதாராம கல்யாணம்’ திரைப்படத்தில் கீதாஞ்சலி நடித்த சீதை கதாப்பாத்திரம் அனைவராலும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இதனிடையே, கீதாஞ்சலியின் மறைவுக்கு தெலுங்கு திரைப்பட சங்கம் மற்றும் பிரபல தெலுங்கு நடிகா், நடிகைகள் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.