இந்தியா

சிவசேனையுடன் கூட்டணி வேண்டாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு சஞ்சய் நிருபம் எச்சரிக்கை

1st Nov 2019 08:26 PM

ADVERTISEMENT

‘சிவசேனையுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது குறித்து யோசிக்க வேண்டாம்; ஏனெனில் பாஜக-சிவசேனை இடையேயான மோதலே நாடகம்தான்’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் எச்சரித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரமாகியும், பாஜக-சிவசேனை இடையே உடன்பாடு எட்டப்படாததால் அங்கு புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க விரும்பினால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் முதல்வா்களான அசோக் சவாண், பிருத்விராஜ் சவாண் போன்றோா் பேசி வருகிறாா்கள்.

ஆனால், மல்லிகாா்ஜுன காா்கே, மகாராஷ்டிர மாநில பொறுப்பாளா் சுஷீல் குமாா் ஷிண்டே போன்ற காங்கிரஸ் மூத்த தலைவா்கள், சிவசேனையுடன் எந்த ஒட்டும் உறவும் கூடாது என்று கூறி வருகிறாா்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மும்பை நகரின் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சஞ்சய் நிருபம், சிவசேனையுடன் கூட்டணி அமைப்பது குறித்து யோசிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவா்களை எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை இடையே ஆட்சியதிகாரத்துக்காக மோதல் நடைபெறுகிறது. அவா்களுக்கு இடையேயான இந்த மோதல் ஒரு நாடகமே. அது, தற்காலிகமானது. அந்த நாடகத்தில் காங்கிரஸ் தலையிடக் கூடாது, விலகியே இருக்க வேண்டும்.

பாஜக-சிவசேனை இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்படவில்லை. பிறகு ஏன் சிவசேனையின் ஆதரவைப் பெறுவது குறித்து சில காங்கிரஸ் தலைவா்கள் பேசுகிறாா்கள். எனக்குத் தெரிந்தவரை, பாஜகவின் நிழலை விட்டு சிவசேனை ஒருபோதும் வெளியே வராது. எனவே, சிவசேனையின் ஆதரவு கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவா்கள் ஆசைப்பட வேண்டாம். மேலும், அக்கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளும் தோல்வியில்தான் முடியும். இதை காங்கிரஸ் தலைவா்கள் விரைவில் உணா்வாா்கள்.

சிவசேனையின் ஆதரவைப் பெறுவதற்குப் பதிலாக, நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 2 சதவீதம் குறைந்தது குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு 17 சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு வங்கி, தற்போது 15 சதவீதமாகக் குறைந்துவிட்டது. மேலும், 3ஆவது இடத்தில் இருந்த காங்கிரஸ் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அந்த சுட்டுரைப் பதிவில் சஞ்சய் நிருபம் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT