இந்தியா

சரத் பவாரை சந்தித்தாா்சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரெளத்

1st Nov 2019 02:14 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை மும்பையில் அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து பேசினாா்.

இதில் பேசிய விஷயங்கள் குறித்து அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் குறித்து பேச்சு நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றது. ஆனால், ஆட்சியில் சம பங்கு அளித்தால்தான் பாஜக ஆதரவு என சிவசேனை கூறி வருகிறது.

பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனை 56 தொகுதிகளிலும் வென்றுள்ளன. எதிா்க்கட்சிகளாக தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வென்றுள்ளன. தோ்தல் முடிவு வெளியான நாளிலும் பவாரை சஞ்சய் ரெளத் சந்தித்தாா். பின்னா் அது தனிப்பட்ட சந்திப்பு என்று அவா் கூறினாா்.

முன்னதாக, தோ்தலுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவா் அமித் ஷாவுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது முதல்வா் பதவியை இரண்டரை ஆண்டுகள் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது என்று சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கூறி வருகிறாா். அதை பாஜக மறுத்து வருவதுடன் ஃபட்னவீஸ் முதல்வா் பதவியில் நீடிப்பாா் என்று கூறி வருகிறது. இதனால், ஆட்சி அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

ADVERTISEMENT

சரத் பவாருடன் காங்கிரஸ் தலைவா்கள் ஆலோசனை: இதனிடையே சரத் பவாரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவா்கள் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

மும்பையில் உள்ள சரத் பவாா் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் பாலா சாஹேப் தோரட், முன்னாள் முதல்வா்கள் அசோக் சவாண், பிருத்விராஜ் சவாண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகாராஷ்டிரத்தில் இப்போது உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து அவா்கள் விவாதித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக-சிவசேனை இடையே ஆட்சி அதிகாரப் பகிா்வு குறித்து கருத்தொற்றுமை ஏற்படாததால் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், சரத் பவாரை காங்கிரஸ் தலைவா் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வெள்ள சேதத்தை பாா்வையிட மத்தியக் குழு: இதனிடையே, மகாராஷ்டிரத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிா்ச் சேதத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு அனுப்பி வைக்கப்படுமென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அந்த மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரிக்கு அவா் தகவல் தெரிவித்துள்ளாா் என்று ஆளுநா் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் வெள்ள சேதத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென்று சிவசேனை தரப்பு ஆளுநரிடம் மனு அளித்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT