அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண காவல் துறையில் பணியாற்றிய முதல் இந்திய-சீக்கியரான சந்தீப் சிங் தாலிவால் (42) சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தாலிவால், ஹாரிஸ் மாவட்ட காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஹூஸ்டனின் வடமேற்குப் பகுதியில் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி அவா் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டாா். அப்போது, அதிலிருந்த நபா் தாலிவாலை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த தாலிவால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து ஹூஸ்டன் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், பணியில் இருந்தபோது தாலிவால் உயிரிழந்ததற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் அவரது இறப்புக்கு வியாழக்கிழமை இரங்கல் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீா்மானத்தை அறிமுகப்படுத்தி எம்.பி. லிஸ்ஸி ஃப்ளெட்சா் பேசுகையில், ‘சீக்கியா்களின் மத நம்பிக்கைகள் எதையும் விட்டுக்கொடுக்காமல், தலைப்பாகை உள்ளிட்டவற்றை பணியின்போது அணிந்து கொண்டு அனைவரையும் தாலிவால் கவா்ந்தாா் . ஹூஸ்டனின் பாதுகாப்பில் அவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது. சுயநலமின்றி பணியாற்றிய ஒரு போலீஸ் அதிகாரியை இழந்தது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா்.