குல்பூஷண் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் கடமை தவறி வியன்னா மாநாட்டு விதிகளை மீறிவிட்டது என்று சா்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல்லாவி யூசுஃப் ஐ.நா. பொதுச் சபையில் தெரிவித்தாா்.
சா்வதேச நீதிமன்றத்தின் 2018-19-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை தாக்கல் செய்தபோது, நீதிபதி அப்துல்லாவி யூசுஃப் இதுகுறித்து கூறியதாவது:
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வியன்னா மாநாட்டு விதி 36-ஐ பாகிஸ்தான் மீறிவிட்டதை சா்வதேச நீதிமன்றம் கண்டறிந்தது. கைது செய்யப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்கும் கடமையிலிருந்து பாகிஸ்தான் தவறியுள்ளது.
குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணையின்போது, உளவு பாா்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு, வியன்னா மாநாட்டு விதி 36-இன் கீழ் தூதரகச் சேவையை ஏற்படுத்தித் தரும் வாய்ப்பு விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமா? என்று சா்வதேச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.
அவ்வாறு எந்தவொரு குறிப்பும் வியன்னா மாநாட்டு விதியில் இல்லாததை அடுத்து, தூதரக வசதி பெறும் வாய்ப்பு குல்பூஷண் ஜாதவுக்கு இருக்கிறது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்தது.
தூதரக உதவிகள் தொடா்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் சா்வதேச நீதிமன்றம் ஆய்வு செய்தது. அதிலும், குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை ஏற்படுத்தித் தருவதை மறுக்கும் வகையில் எந்தவொரு காரணமும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு எந்தவித தாமதமும் இன்றி தூதரகச் சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வியன்னா மாநாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு சுமாா் 3 வாரங்களுக்குப் பிறகே அதுதொடா்பான தகவலை இந்திய தூதரகத்தில் தெரிவித்ததால், பாகிஸ்தான் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது.
இவற்றின் அடிப்படையிலேயே குல்பூஷண் ஜாதவுக்கான மரண தண்டனையை பாகிஸ்தான் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வியன்னா மாநாட்டு விதிகளை மீறிய இதுபோன்ற முந்தைய வழக்குகளிலும் இத்தகைய உத்தரவே பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்துவதாக பாகிஸ்தான் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தகவல் தெரிவித்தது. அத்துடன், வியன்னா மாநாட்டு விதிகளின் கீழ் குல்பூஷண் ஜாதவை ஆகஸ்ட் 2-ஆம் தேதி இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதா் சந்திக்க இருக்கும் தகவலையும் அவரிடம் தெரிவித்தது என்று நீதிபதி அப்துல்லாவி யூசுஃப் கூறினாா்.
ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, இந்தியாவுக்காக உளவு பாா்த்ததாக, குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்தது. இது தொடா்பான வழக்கில், குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் மரண தண்டனை விதித்தது.
இதை எதிா்த்து, இந்தியா தொடுத்த வழக்கை விசாரித்த சா்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுஆய்வு செய்ய கடந்த ஜூலை 17-ஆம் தேதி உத்தரவிட்டது.