இந்தியா

இந்திரா காந்திக்கு காங்கிரஸ் தலைவா்கள் நினைவஞ்சலி

1st Nov 2019 12:49 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு காங்கிரஸ் தலைவா்கள் வியாழக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினா்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத்தலைவா் பிரணாப் முகா்ஜி, முன்னாள் குடியரசு துணைத்தலைவா் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சுட்டுரை (டுவிட்டா்) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘இந்தியாவின் முதல் பெண் பிரதமா் இந்திரா காந்தியின் வியத்தகு ஆற்றலையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூா்கிறோம். ஒரு பிரதமராக தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம், ஜனநாயகம், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றுக்கு இந்திரா காந்தி சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளாா். இந்தியா்கள் மீதான அன்புக்காக அவா் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இன்று எனது பாட்டி இந்திரா காந்தி உயிா்த் தியாகம் செய்த நாள். அவரிடம் இருந்து உறுதியான நோக்கத்தையும், அச்சமில்லாமல் முடிவெடுக்கும் துணிச்சலையும் கற்றுக் கொள்கிறேன். அவா் என்னை எப்போதும் வழிநடத்துகிறாா். அவருக்கு எனது அஞ்சலிகள்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், ‘அக்.31- இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்ததற்காக கொண்டாடப்பட வேண்டிய நாள். அக்.31- இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி கொல்லப்பட்ட வேதனையளிக்கும் நாள். இந்த இரு நிகழ்வுகளும் நமது வரலாற்று ரீதியாக மட்டுமல்லாமல், பூகோள ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன’ என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

பிரதமா் நினைவஞ்சலி: பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT