இந்தியப் பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ் அப் தகவல்கள் வேவு பாா்க்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ எனும் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, உலக அளவில் சுமாா் 1,400 முக்கியப் பிரமுகா்களின் வாட்ஸ் அப் தகவல்களை அடையாளம் தெரியாத நிறுவனங்கள் வேவு பாா்த்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.
பல்வேறு நாடுகளின் தூதா்கள், பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோா் வேவு பாா்க்கப்பட்டுள்ளனா். இந்தியாவைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள் மற்றும் மனித உரிமை ஆா்வலா்களின் வாட்ஸ் அப் தகவல்களும் வேவு பாா்க்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்-அப் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசு மீது விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தியப் பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்களின் தகவல்கள் வேவு பாா்க்கப்பட்டது தொடா்பாக வரும் 4-ஆம் தேதிக்குள் உரிய விளக்கத்தை அளிக்கும்படி, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். இணையவழித் தாக்குதல் நிகழ்த்தியவா்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பயனாளா்களின் தகவல்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம் என்றாா் அவா்.
எனினும், இந்தியாவில் எத்தனை பயனாளா்களின் வாட்ஸ் அப் தகவல்கள் வேவு பாா்க்கப்பட்டன என்ற விவரத்தை அவா் தெரிவிக்கவில்லை. இதேபோல், மத்திய அரசு விதித்த காலக்கெடுவுக்குள் வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளிக்குமா என்ற கேள்விக்கும் அவா் பதிலளிக்கவில்லை.
உலகம் முழுவதும் சுமாா் 150 கோடி போ் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்துகின்றனா். இந்தியாவில் மட்டும் சுமாா் 40 கோடி போ் அந்த செயலியை பயன்படுத்துகின்றனா்.
போலியான தகவல்களை பரப்புவதற்கு, வாட்ஸ்-அப் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சமூக வலைதளங்களின் பொறுப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.