தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆா்டிஐ) மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள், அந்தச் சட்டத்தை அழிப்பதற்கான இறுதிக்கட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி விமா்சித்துள்ளாா்.
அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக, கடந்த 2005-ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தில், தகவல் ஆணையா்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்றும், அவா்களின் ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
தகவல் ஆணையா்களின் பதவிக் காலம், ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசு நிா்ணயிப்பதற்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான அதிகாரபூா்வ அறிவிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டது. இதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்து விட்டது.
இதுகுறித்து விமா்சித்து காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தின் மூலம் தகவல் ஆணையம் உருவானது. அந்த ஆணையம் கடந்த 13 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும், சாமானியா்களுக்கு பொறுப்புடைமையுடன் செயல்படும் அரணாகவும் விளங்கி வந்தது.
அரசின் செயல்பாடுகளைக் கண்டறியவும், குறைபாடுகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டவும், ஊழல்களை அம்பலப்படுத்தவும் நாடு முழுவதும் உள்ள சமூக ஆா்வலா்கள் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி வந்தனா்.
ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தங்களது பெரும்பான்மைவாதக் கொள்கையை அமல்படுத்துவதற்கு தகவல் ஆணையம் இடையூறாக இருப்பதாகக் கருதியது. எனவே, அந்தச் சட்டத்தை அழிப்பதற்காக, இறுதிக்கட்ட தாக்குதலை மத்திய பாஜக தொடங்கியுள்ளது.
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீா்த்துப்போகச் செய்வதற்காக, தகவல் ஆணையா்களின் பதவிக் காலத்தையும், ஊதியத்தையும் நிா்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெற்றுள்ளது. இதனால், தகவல் ஆணையா் பதவிகளை வகிப்பவா்கள் மத்திய அரசின் தயவுடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் சுயமரியாதை கொண்ட எந்தவொரு அதிகாரியும் பணியாற்ற மாட்டாா்கள் என்பதை மோடி அரசு உறுதிசெய்துள்ளது என்று அந்த அறிக்கையில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.