ராகுல் தலைமை தொடர வேண்டும்: ராஜிநாமாவை நிராகரித்தது காங். செயற்குழு

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி சனிக்கிழமை அறிவித்தார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி சனிக்கிழமை அறிவித்தார். ஆனால், அவரது ராஜிநாமாவை கட்சியின் செயற்குழு நிராகரித்து விட்டது.
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், குலாம் நபி ஆஸாத், ஷீலா தீட்சித், மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, ஜோதிராதித்ய சிந்தியா, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததற்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர், கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி கூறினார். ஆனால், அதனை காங்கிரஸ் நிராகரித்து விட்டது.
இதுகுறித்து கட்சியின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக கூறினார். ஆனால், அவரது ராஜிநாமா முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமித்த குரலில், ஒருமனதாக நிராகரித்து விட்டது. 
மேலும், அவர் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றும், இந்த இக்கட்டான சூழலில் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் மறுசீரமைப்பு செய்வதற்கு ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. 
அதுமட்டுமன்றி, நாட்டின் இளைய தலைமுறையினர், விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மைச் சமூகத்தினர், ஏழைகள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோரின் நலனுக்காக, சித்தாந்த ரீதியில் ராகுல் காந்தி தனது போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் காங்கிரஸ் செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com