பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதில் இந்தியா உறுதி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா உரை

காஷ்மீர் மற்றும் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களால், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதில் இந்தியா மிக உறுதியாக உள்ளது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவுத் துறை சுஷ்மா
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் புதன்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் புதன்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.


காஷ்மீர் மற்றும் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களால், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதில் இந்தியா மிக உறுதியாக உள்ளது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.  
இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
அந்த மாநாட்டில் சுஷ்மா பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்களை குறி வைத்து பயங்கரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். அந்த கொடூர சம்பவத்தின் நினைவே  மக்கள் மத்தியில் இன்னும் மறையவில்லை. 
அதற்குள் அண்டை நாடான இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடூர சம்பவமும் அனைவர் மனதிலும் வடுவாக அமைந்து விட்டது. எங்களது அண்டை நாட்டு சகோதர சகோதரிகளுக்காக நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். இந்த இரு சம்பவங்களும், பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும் என்று இந்தியாவை மேலும் உறுதியடையச் செய்துள்ளது. 
உலக நாடுகளிடையே அதிருப்தி இருந்தாலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள், பாதுகாப்பு, வளர்ச்சி உள்பட பல துறைகளிலும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
ஆராய்ச்சிக்கு முன்னுரிமை..:  மனித வள மேம்பாடு, ஆராய்ச்சி, பாதுகாப்பான இணையம், இணையவழி குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் பயனால் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. நீண்ட கால நிலையான வளர்ச்சிக்கு புத்தாக்க விஷயங்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
பிராந்திய இணைப்பு..: பிராந்திய இணைப்பு திட்டங்கள் அனைத்தையும் இந்தியா வரவேற்கிறது.  ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தஹாருக்கு சரக்கு போக்குவரத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது. அதுமட்டுமன்றி,  சாப்ஹார் துறைமுகத் திட்டம், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு உதவ தயார்..: ஆப்கானிஸ்தானை அமைதியான, பாதுகாப்பான, நிலையான , பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாற்ற எந்த உதவியையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு..:  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மேலும் வலுப்படுத்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அந்த சீர்திருத்தங்களுக்கு  பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று சுஷ்மா வலியுறுத்தினார்.
ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கினர். பிராந்திய பாதுகாப்பு,  ஒத்துழைப்பு, மற்றும் பிரச்னைகள் ஆகியவற்றை இந்த அமைப்பில் உள்ள  நாடுகள் இணைந்து எதிர்கொள்ளும். சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த அமைப்பில்,  கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்தது. இந்த அமைப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும்  உறுப்பு நாடுகளாக இணைந்தன.
சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங்-இ-யுடன் இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், சீன அமைச்சர் வாங்-இ-யும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com