சந்திராயன்-2 விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

ரூ.800 கோடி மதிப்பீட்டில் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இந்த விண்கலத்தில் ரஷியாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது. 
சந்திராயன்-2 விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.800 கோடி மதிப்பீட்டில் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இந்த விண்கலத்தில் ரஷியாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது. மேலும், நவீன ரக முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியில் இருந்து புறப்பட்ட 14-ஆவது நாளில், நிலவில் தனது பணியை சந்திராயன்-2 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் விண்கலம் மட்டுமின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திராயன்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். சுமார் 20 கிலோ எடை கொண்ட ரோவர் கருவியில் 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவி சூரியசக்தி மூலம் இயங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன் 2013-இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாகவே இந்த ரோவர் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ களம் இறங்கி உள்ளது. 

இந்நிலையில், சந்திராயன்-2 குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், 

சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிக்குள்ளாக விண்ணில் செலுத்தப்படும். இஸ்ரோவுக்கு மிகவும் சவாலான திட்டமான இது இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும். யாரும் தரையிறங்காத இடத்தில் சந்திராயன்-2 தரையிறங்க உள்ளது.

ஆண், பெண் என இரு பாலின விண்வெளி ஆய்வாளர்களையும் தயார்படுத்த வேண்டியது அவசிமானதாகும். விரைவில் இந்த திட்டத்தில் பெண் விண்வெளி ஆய்வாளரையும் இணைக்க திட்டம் உள்ளது. ஜப்பான் மற்றும் ரஷியா போன்ற இதர நாடுகளிலும் இஸ்ரோ இயங்குதளங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அப்போது தான் விண்கலத்தின் இயக்கத்தில் துல்லியத்தன்மையை பெற முடியும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை எனில் அது சந்திராயன்-1 திட்டம் என்று கூறலாம். நிலவின் வட்டப் பாதையில் சந்திராயன்-1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்திராயன்-1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

மேலும் சந்திராயன், நிலவில் நீர்வழித் தடங்கள் தெரிவதாக கூறியது. இந்தக் கண்டுபிடிப்பு இதுவரை எந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் செய்யாதது ஆகும். அதன்பின் சில நாள்களில் இந்தியாவின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com