ராஜீவ் காந்தி மீதான மோடி விமர்சனம்; "கர்மா' காத்திருக்கிறது: ராகுல்

ராஜீவ் காந்தியை "ஊழலில் முதன்மையானவர்' என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, உங்கள் "கர்மா' (வினைப்பயன்) காத்திருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி மீதான மோடி விமர்சனம்; "கர்மா' காத்திருக்கிறது: ராகுல்

ராஜீவ் காந்தியை "ஊழலில் முதன்மையானவர்' என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, உங்கள் "கர்மா' (வினைப்பயன்) காத்திருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
 உத்தரப் பிரதேசத்தில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி, முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியை கடுமையாக விமர்சித்தார்.
 அப்போது, "உங்கள் தந்தையை (ராஜீவ் காந்தி) அவரால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் வேண்டுமானால் குற்றமற்றவர் என்று கூறலாம். ஆனால், உண்மையில் அவர், "ஊழலில் முதலிடம் பெற்றவர்' என்ற பெயருடன்தான் மரணமடைந்தார்' என்று பிரதமர் பேசினார்.
 மேலும், "எனது நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவதூறான குற்றச்சாட்டுகளை ராகுல் தொடர்ந்து கூறி வருகிறார். இதனை ஒரு பேட்டியில் அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், நான் 50 ஆண்டுகள் பாடுபட்ட சேர்த்த நற்பெயரை ராகுலால் எதுவும் செய்துவிட முடியாது. என்னை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் முயல்கின்றனர். ஆனால், இவர்களது நிலையற்ற, வலிமையில்லாத அரசை மக்கள் விரும்பிவில்லை' என்றும் மோடி பேசியிருந்தார்.
 இந்நிலையில், தனது தந்தையை மோடி விமர்சித்தது குறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "மோடி அவர்களே, நமது யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது.
 எனது தந்தை குறித்து நீங்கள் எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உங்களுக்கு ஒருபோதும் கைகொடுக்காது. எனது ஆழ்ந்த அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு உண்டு' என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனது தந்தை மீது மோடி கூறிய குற்றச்சாட்டை ராகுல் மறுத்துள்ளதுடன், தவறான குற்றச்சாட்டைக் கூறிய மோடி அதற்கான பயனை அனுபவிப்பார் என்றும் விமர்சித்துள்ளார்.
 ப.சிதம்பரம் கடும் கண்டனம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழல்களில் முதன்மையானவர் என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் தமிழில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், "தேர்தலில் தன்னுடைய கட்சியின் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது.
 இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற முதுமொழி பிரதமர் மோடிக்குத் தெரியாதா? போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா? இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அன்றைய பாஜக அரசு முடிவெடுத்ததும் அவருக்குத் தெரியாதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com