புதன்கிழமை 17 ஜூலை 2019

5-ஆம் கட்டத் தேர்தல்: சோனியா, ராகுல் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

DIN | Published: 06th May 2019 03:16 AM

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது மக்களவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், மேலும் 49 மக்களவைத் தொகுதிகளுக்கும் திங்கள்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5-ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்கம் (7), மத்தியப் பிரதேசம் (7), பிகார் (5), ஜார்க்கண்ட் (4), ஜம்மு-காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5-ஆம் கட்டத் தேர்தலில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் 8.75 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 4.63 கோடி பேர் ஆண்கள்; 4.12 கோடி பேர் பெண்கள் ஆவர். தேர்தலையொட்டி 7 மாநிலங்களிலும் 96,088 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் சோனியா காந்தியின் ரேபரேலி, ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதிகளும் அடங்கும். இத்தொகுதிகளில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் -ஆர்எல்டி கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அந்த 2 தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டதாக அக்கூட்டணி தெரிவித்துள்ளது.
ரேபரேலி, அமேதி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. இதில் ரேபரேலியில் கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஓரிருமுறை தவிர்த்து, அனைத்து முறையும் காங்கிரúஸ வென்றுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியின் எம்.பியாக சோனியா காந்தி உள்ளார்.
அமேதி தொகுதியிலும் ஓரிருமுறை தவிர்த்து, அனைத்து முறையும் காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு வென்றார். அதற்கடுத்து கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அமேதி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். இம்முறையும் ஸ்மிருதி இரானியே பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

லக்னௌ தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் சமாஜவாதி வேட்பாளராக நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடுகிறார்.
இவர்களைத் தவிர்த்து 5-ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடுவோரில், மத்திய அமைச்சர்கள் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், ஜெயந்த் சின்ஹா, அர்ஜுன் ராம் மேக்வால், வீரேந்திர குமார் கடிக், பாஜக எம்பிக்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, அஜய் நிஷாத், பிரகலாத் படேல், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரரும், பிகார் அமைச்சருமான பசுபதி குமார் பாரஸ், காங்கிரஸ் எம்எல்ஏவும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான கிருஷ்ணா புனியா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பன்வார் ஜிதேந்திர சிங், ஜிதின் பிரசாத் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
மேற்கு வங்கத்தில் முந்தைய வாக்குப்பதிவின்போது மோதல் சம்பவங்கள் பரவலாக நடைபெற்றன. இதைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 7 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு 3-ஆவது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல், லடாக் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திரத்தில் 5 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல்: ஆந்திர சட்டப் பேரவைக்கும், அந்த மாநிலத்திலுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் 5 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், 3 சட்டப் பேரவைத் தொகுதிகள், 5 மக்களவைத் தொகுதிகளில் இருக்கும் 5 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அந்த 5 வாக்குச்சாவடிகளிலும் திங்கள்கிழமை மறுதேர்தல் நடைபெறுகிறது.

7 மாநிலங்கள்; 51 தொகுதிகள்
வேட்பாளர்கள் 674
வாக்காளர்கள் 8.75 கோடி
ஆண்கள் 4.63 கோடி
பெண்கள் 4.12 கோடி
வாக்குச்சாவடிகள் 96,088

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு 
தமிழ் மொழியிலும் தபால் துறை தேர்வு: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
ஆந்திரம், சத்தீஸ்கருக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
கும்பல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம்: அசோக் கெலாட்