புதன்கிழமை 17 ஜூலை 2019

ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரிவு

DIN | Published: 06th May 2019 01:45 AM

ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு முற்றிலும் சரிந்துவிட்டது. எனவே, மத்தியில் அடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வரும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் கூறியுள்ளார்.
 உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஹிந்தி அதிகம் பேசப்படும் மாநிலங்களில்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதுவே அக்கட்சி தனிபெரும்பான்மை பெறவும் காரணமாக அமைந்தது. எனினும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸிடம், பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை மீட்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த சச்சின் பைலட் இது தொடர்பாக கூறியதாவது:
 கடந்த தேர்தலில் மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வெற்றி பெற்றதுபோல, இந்த முறை பாஜகவால் அவரை வைத்து வெற்றி பெற முடியாது. ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளில் அவரது அரசு எந்த அளவுக்கு திறனின்றி இருந்தது என்பதை மக்கள் பார்த்துவிட்டனர். கடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களில்தான் அதிக வெற்றி கிடைத்தது. இந்த முறை அது நடக்காது. மோடியின் வார்த்தை ஜாலத்தை நம்பி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற மாட்டார்கள்.
 மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் கிடைத்ததைவிட மோசமான தோல்வி மக்களவைத் தேர்தலில் கிடைக்கும். கும்பல் கொலை, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற அட்டூழியங்கள் மக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளன. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் உணர்வுப்பூர்வமாக சில பிரச்னைகளை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெறுவதே பாஜகவின் கொள்கையாக உள்ளது. இவை அனைத்தும் இப்போது மக்கள் மத்தியில் வெளிப்பட்டுவிட்டது. பாஜக ஆட்சியின் மோசமான செயல்பாடுகளையும், முறைகேடுகளையும் மக்கள் மன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் என்றார்.
 தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்குமா? என்ற கேள்விக்கு, "மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமையப் போவது உறுதி. தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ஆம் தேதியன்றே நமது நாட்டுக்கு புதிய பிரதமர் கிடைப்பார். நாட்டுக்கு யார் தலைமை வகிப்பது என்பதை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
 பாஜகவின் சவால்களை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முறியடிக்க முடியும். பாஜக தலைமையிலான அரசை எதிர்ப்பதிலும், தேர்தலில் அக்கட்சியை தோற்கடிப்பதிலும் பிராந்தியக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், தேசிய அளவில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்' என்றார் சச்சின் பைலட்.
 பாஜகவின் தேர்தல் பிரசார உத்தி குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "தேசியவாதம், தேசப்பற்று என்று பேசி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக கருதுகிறது.
 ஆனால், உண்மையான தேசபக்தி எது என்பது இளைய தலைமுறையினருக்கு நன்றாகத் தெரியும். நாட்டில் வேலையின்மை, பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கும் நேரத்தில், அதனைத் தவிர்த்துவிட்டது, வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக பேசிவரும் தேசியவாதம் இளைஞர்கள் மத்தியில் எடுபடாது. இன்றைய இளம் வாக்காளர்களை பாஜகவால் அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது என்றார்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு 
தமிழ் மொழியிலும் தபால் துறை தேர்வு: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
ஆந்திரம், சத்தீஸ்கருக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
கும்பல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம்: அசோக் கெலாட்