திங்கள்கிழமை 20 மே 2019

பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம்: அகிலேஷ் திட்டவட்டம்

DIN | Published: 06th May 2019 03:17 AM

சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியே பிரதமரை தேர்வு செய்து, ஆட்சி அமைக்கும் என சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அகிலேஷ் யாதவ் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 பிரதமர் மோடி தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். பிரியங்கா, சமாஜவாதி கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவதால், பாஜகவுக்கு செல்லக்கூடிய வாக்குகள்தான் பிரியும். இதன்மூலம் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியே மாபெரும் வெற்றியை பெறும்.
 இதனை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். மகா கூட்டணியே வெற்றியைப் பெறும்; மக்கள் ஆதரவு எங்களுக்கே என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இன்னும் சில காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது, பாஜகவுக்கு விழும் வாக்குகளை நாங்கள் பிரிப்போம்; மகா கூட்டணி வலுவாக உள்ளதால் அதுவே வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள்.
 தொடர்ந்து தீவிர களப்பணியாற்றி வருவதால், எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு மக்களும் துணை நிற்கிறார்கள். இதன் காரணமாக இந்தத் தேர்தலில் அதிகபட்சமான இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றியின் மூலம், மாபெரும் சகாப்தம் படைத்து, உத்தரப் பிரதேசத்தில் சமூக நீதியை நிலை நாட்டுவோம். இந்தக் கூட்டணி வரும் 2022ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்.
 இந்த முறை நடைபெற உள்ள தேர்தலில் நமது தேசம் புதிய பிரதமரை சந்திக்க உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை எங்களது மகா கூட்டணியே முடிவு செய்யும்.
 கடந்த தேர்தலின்போது, பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும், தற்போதைய தேர்தலில் அவருக்கு எதிராகத் திரும்பி விட்டது என்று அவர் தெரிவித்தார்.
 கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி?: தங்கள் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
 உத்தரப் பிரதேசத்தில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தின் போது, அகிலேஷ் யாதவ், காங்கிரஸுடன் இணைந்து மாயாவதிக்கு எதிராக ஒரு விளையாட்டை நடத்தி வருகிறார் என்று மோடி குறிப்பிட்டார்.
 இதற்கு பதிலளித்து மாயாவதி கூறுகையில், சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகள் கூட்டணி அமைத்ததில் இருந்தே உ.பி.யில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியால் உத்தரப் பிரதேசத்தில் தங்கள் தோல்வி உறுதி என்பதை பாஜக உணர்ந்துவிட்டது.
 எனவேதான், கூட்டணியை எப்படியாவது பிளவுபடுத்தி விடலாம் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் என்றார் அவர்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மகாராஷ்டிராவில் லாரியின் டயர் வெடித்து விபத்து: 13 பேர் பரிதாப பலி 
கோவிலில் கோட்ஸே பிறந்தநாள் கொண்டாட்டம்: குஜரத்தில் ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது 
நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்
இந்தியா முதல்முறையாக துல்லியத் தாக்குதல் நடத்தியது 2016-இல் தான்: ராணுவம்
கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிரொலி: 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை