எஃப்16 போர் விமானங்களை விதிகளை மீறி பாகிஸ்தான் பயன்படுத்தியதா?

இந்தியா மீது தாக்குதல் நடத்த எஃப்16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எஃப்16 போர் விமானங்களை விதிகளை மீறி பாகிஸ்தான் பயன்படுத்தியதா?

இந்தியா மீது தாக்குதல் நடத்த எஃப்16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது.
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்துள்ள அந்த அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படையினர் தாக்கி அழித்தனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டு போர் விமானங்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால், அதனை இந்திய விமானப்படையினர் முறியடித்தனர். இந்தியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்16 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கான ஆதாரங்களையும் இந்திய அதிகாரிகள் வெளியிட்டனர்.
ஆனால், எஃப்16 போர் விமானங்களைப் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், இது குறித்தான ஆதாரங்கள் அனைத்தையும் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இது குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இந்த விவகாரம் குறித்து இந்தியா வழங்கிய ஆதாரங்களைத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறோம். 
இந்த விவகாரம் குறித்தும், அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளுக்கு வழங்கும் நடைமுறைகள் குறித்தும் என்னால் பொது வெளியில் தெரிவிக்க முடியாது. 
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானிடம் இருந்து விளக்கம் பெறப்படும். அதன்பிறகு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com