அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மட்டுமே விரும்புகிறது, பயங்கரவாதத்தை அல்ல: வெங்கய்ய நாயுடு

பாரகுவேவில் உள்ள இந்திய சமூக மக்கள் முன் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை உரையாற்றினார். 
அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மட்டுமே விரும்புகிறது, பயங்கரவாதத்தை அல்ல: வெங்கய்ய நாயுடு

பாரகுவேவில் உள்ள இந்திய சமூக மக்கள் முன் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பயங்கரவாதம் மனித குலத்துக்கு எதிரானது, அதற்கு மதம் கிடையாது. பயங்கரவாதம் மிகவும் ஆபத்தானது. எனவே பயங்கரவாதம் உலகளவில் அழிக்கப்பட வேண்டியது. அதற்கு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராட எந்த தயவும் தேவையில்லை, ஏனென்றால் நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவால் நிச்சயம் முடியும். சமீபத்தில் கூட சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தானையோ அல்லது பாகிஸ்தான் மக்கள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகளை மட்டுமே அழித்துள்ளது.

ஆனால், தற்போது இதன் நம்பகத்தன்மை குறித்து உள்நாட்டிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரையில் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் முக்கியம். இதில் யாருக்காவது சந்தேகமிருந்தால், அவர்கள் நேரடியாகவே பாகிஸ்தானுக்கு சென்று சோதனை மேற்கொண்டு, அந்நாட்டு அரசிடம் விசாரணை நடத்தட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா, நமது அண்டை நாடுகள் உட்பட அனைவருடனும் நல்லுறவை மட்டும் தான் விரும்புகிறது, பயங்கரவாதத்தை அல்ல. நம்மால் நண்பர்களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அக்கம்பக்கத்தினரை மாற்ற இயலாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயி கூட தெரிவித்துள்ளார். எனவே அதை மனதில் வைத்து தான் இந்தியா செயல்படுகிறது.

நமது அக்கம்பக்கத்தில் உள்ள ஒருவர், பயங்கரவாதத்தை தனது உள்நாட்டு கொள்கையாக கொண்டுள்ளார். அவர்கள் பயங்கரவாதம் வளர அனைத்து சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தியதில்லை என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com