இந்தியா

மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம்: பிரிக்ஸ் கூட்டத்தில் மோடி பேச்சு

29th Jun 2019 01:24 AM

ADVERTISEMENT


மனித குலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது; பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் உயிரிழப்பது மட்டுமன்றி பொருளாதார வளர்ச்சியும் ஸ்திரத்தன்மையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடான சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டையொட்டி, பிரிக்ஸ் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா,  தென் ஆப்பிரிக்கா) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற திட்டமிடப்படாத கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் மிஷெல் டெமர் ஆகியோர் பங்கேற்றனர். சர்வதேச அரசியல் சூழல், பாதுகாப்பு, உலக பொருளாதார-நிதி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பொதுவான சவால்களை குறிப்பிட்டதுடன், அதற்கான 5 அம்ச அணுகுமுறையையும் முன்வைத்தார். அவர் பேசியதாவது:
உலக பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, நாம் எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்களில் ஒன்றாகும். உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பாரபட்சமான முடிவுகளும், தங்களது வர்த்தக நலனை காப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு நாடுகள் செயல்படுவதும் கவலையளிக்கும் விஷயங்களாக உள்ளன.
அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வது மற்றொரு சவாலாக இருக்கிறது. சமத்துவத்தை அதிகரிப்பதுடன், அனைவரின் மேம்பாட்டையும் உறுதி செய்வதே வளர்ச்சிக்கான சரியான பாதையாகும்.
மனித குலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. இதனால், அப்பாவி மக்கள் உயிரிழப்பது மட்டுமன்றி பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இனவெறி, பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் அனைத்து விதமான ஆதரவையும் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் நிலவுகிறது.
5 அம்ச அணுகுமுறை: இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு, 5 அம்ச அணுகுமுறையை முன்வைக்கிறேன்.
சர்வதேச நிதி அமைப்புகளின் பாரபட்சமான முடிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்கு, பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்; சர்வதேச நிதி, வர்த்தக அமைப்புகளில் அனைத்து நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவை குறைந்த விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகளால் நிறுவப்பட்ட வளர்ச்சி வங்கியானது, உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து முதலீடுகளை வழங்க வேண்டும்.
பேரிடர் மீள்கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியை இந்தியா முன்னெடுத்துள்ளது. இந்த கூட்டமைப்பில் பிரிக்ஸ் நாடுகள் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட அனைத்து நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பை பெற வேண்டியுள்ளது. இதற்காக, பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டை நடத்த வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
கூட்டறிக்கை: பிரிக்ஸ் தலைவர்களின் கூட்டத்துக்கு பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரிக்ஸ் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக, ஐ.நா. ஆதரவுடன் ஒருங்கிணைந்த, விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தங்களது பிராந்தியங்களில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். இதேபோல், இணையதளத்தை பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள், வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து நாடுகளின் நலன்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, உலக அளவில் சாதகமான பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும். இதற்கு, தொடர் பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம்.
ஊழலுக்கு எதிராகவும், சட்டவிரோத சொத்துகளை மீட்பதிலும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே சட்டரீதியிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வாங்கப்படும் சொத்துகள், பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் வலுவான ஒருங்கிணைப்புடன் செயல்பட பிரிக்ஸ் நாடுகள் உறுதிபூண்டுள்ளன. பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துவதிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு, சூரியமின்சக்தி உற்பத்தி ஆகிய துறைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT