உத்தரப் பிரதேச மாநிலம், கமாரியா பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட தாய், டிரங்க் பெட்டியில் தனது 2 குழந்தைகளையும் அடைத்து வைத்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கமாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லு அன்சாரி. ஜமக்காளம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு ஹாடானியா (6) என்ற மகளும், ஹசன் (3) என்ற மகனும் இருந்தனர். மல்லு அன்சாரி பணிக்கு சென்று விட்டு வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, அவரது குழந்தைகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் குழந்தைகளை காணவில்லை.
அப்போது டிரங்க் பெட்டியில் வைத்திருந்த துணிகள் வெளியே சிதறி கிடந்ததால் சந்தேகமடைந்த அன்சாரி, பெட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தன.
உடனே, மருத்துவமனைக்கு குழந்தைகளை அவர் எடுத்துச் சென்றார். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே, இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட அன்சாரியின் மனைவி, குழந்தைகளை டிரங்க் பெட்டிக்குள் அடைத்து விட்டதால் மூச்சுத்திணறி இறந்து விட்டன. இதுகுறித்து, குடும்ப உறுப்பினர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. இருப்பினும், போலீஸாரே தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.