உத்தரப் பிரதேசத்தில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து, சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல், உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் கூறியதாவது:
19 பேர் கொண்ட அந்த கும்பல், அஸ்மோலியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலைக்கு வியாழக்கிழமை சென்றது. தங்களை சிபிஐ அதிகாரிகள் என்ற கூறிக்கொண்டு, சர்க்கரை ஆலையில் அந்த கும்பல் சோதனை நடத்தியது. பின்னர் சுற்றுச்சூழல் விதிகளை சரியாகப் பின்பற்றவில்லை என்றும், மேலும் சில குறைபாடுகள் இருப்பதாகவும் ஆலை நிர்வாகத்திடம் அவர்கள் கூறினர். ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை தரவேண்டும் என்றும் அவர்கள் கேட்டனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆலையின் ஊழியர் ஒருவர், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக, அங்கு சென்ற காவல் துறையினர், அந்த கும்பலைச் சேர்ந்த 16 பேரைக் கைது செய்தனர். 3 பேர் தப்பியோடி விட்டனர். கைதான 16 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட காவல் துறை எஸ்.பி. யமுனா பிரசாத்.