இந்தியா

காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடர வாய்ப்பில்லை: வீரப்ப மொய்லி

29th Jun 2019 01:29 AM

ADVERTISEMENT


காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி தொடர்வதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இப்போதைய சூழலில், காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி தொடர்வதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். எனவே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேறு நபரின் பெயரை பரிசீலிப்பதற்கு முன்பு கட்சியின் செயற்குழு கூட வேண்டும். ராகுலின் ராஜிநாமாவை செயற்குழு ஏற்காத வரையில், ஊகச் செய்திகள் வெளிவருவதை தடுக்க முடியாது என்றார் அவர்.
ராகுலின் சகோதரி பிரியங்காவை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்று சில தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக மொய்லிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை கட்சியின் செயற்குழு மேற்கொள்ளும். அதுவரை காத்திருக்க விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி குறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்த வீரப்ப மொய்லி, கட்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறியிருந்தார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். 
தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தில்லியில் கடந்த மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது. ராகுல் தனது முடிவை கைவிட வேண்டும் என்று பல்வேறு மூத்த தலைவர்களும் தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் தொடர்ந்து உறுதியாக உள்ளார்.
தில்லியில் கடந்த புதன்கிழமை காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தனது முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன் என்று எம்.பி.க்களிடம் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT