இந்தியா

ஐந்து ஆண்டுகளில் யானைகள் தாக்கி 2,400 பேர் பலி: சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

29th Jun 2019 01:31 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கி சுமார் 2,400 பேரும், புலிகள் தாக்கி 224 பேரும் உயிரிழந்துவிட்டதாக மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த உறுப்பினர் அன்டோ அன்டோனியோ எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், யானைகள் தாக்கி 2,398 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 403 பேர் பலியாகினர். நாகாலாந்தில் 397 பேரும், ஜார்க்கண்டில் 349 பேரும் உயிரிழந்தனர். கடந்த 2017-18 காலகட்டத்தில் யானைகளால் தாக்கப்பட்டு 516 பேர் பலியாகியிருந்தனர். 2018-19 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 494-ஆக குறைந்துள்ளது.
புலிகள் தாக்கி 224 பேர் உயிரிழப்பு: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆகும். இதிலும் மேற்கு வங்கமே முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில்  மட்டும் 71 பேர் உயிரிழந்துவிட்டனர். 2017-18 காலகட்டத்தில் புலிகள் தாக்கி 44 பேர் பலியாகியிருந்த நிலையில், 2018-19இல் இந்த எண்ணிக்கை 29-ஆக குறைந்துவிட்டது.
வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான விவகாரங்கள், மாநில அரசின் நிர்வாகத்துக்கு உள்பட்டவையாகும். எனினும், நாடு முழுவதும் விலங்கு - மனித மோதல்கள் தொடர்பான விவரங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அவ்வப்போது பெற்று வருகிறது. யானைகள், புலிகளால் நேரிடும் உயிரிழப்புகள் தவிர வேறு விலங்குகளால் நேரிடும் உயிரிழப்புகள் தொடர்பான விவரங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொகுப்பதில்லை.
பல்வேறு நடவடிக்கைகள்: விலங்கு - மனித மோதல் சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் விலங்களுக்குப் போதிய உணவும், தண்ணீரும் கிடைப்பதை உறுதி செய்யவும், காடுகளிலிருந்து விளை நிலங்களுக்குள் விலங்குகள் நுழைவதை தடுக்க வேலிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உலகிலுள்ள மொத்த புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவல்படி, இந்தியாவில் 2006-இல் 1,411 புலிகள் இருந்தன. 2014-இல் இந்த எண்ணிக்கை 2,226-ஆக அதிகரித்தது.
கடந்த 2017-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டிலுள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கை 27,312 என்று தனது பதிலில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT